சென்னையில் சினிமா நடிகர்கள் சூர்யா - வடிவேலு - டைரக்டர் வீடுகளில்., வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு

சென்னை: தமிழக திரைப்பட நடிகர்கள்- மற்றும் டைரக்டர்கள் வீடு , அலுவலகங்களில் வருமான வரி துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் எவ்வளவு சிக்கியது என்ற விவரத்தை அதிகாரிகள் இன்று மாலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகின்றனர். தமிழ் நடிகர்கள் பலர் வருமான வரி பாக்கி வைத்திருப்பதாகவும், கணக்கில் காட்டாத சொத்துக்கள் வைத்திருப்பதாகவும் அதிகாரிகளுக்கு ரகசிய புகார் வந்தது. இதனையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் சார்பில் அதிரடியாக சென்னையில் திரைப்டத்துறையினர் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சிரிப்பு நடிகர் வடிவேலு வீடும் தப்பவில்லை : காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் அதிகாரிகள் இறங்கினர். இதன்படி சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சூர்யா வீடு, விருகம்பாக்கத்தில் உள்ள சிரிப்பு நடிகர் வடிவேலு வீடு, ரமணா, கஜினி உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் ஏ. ஆர்., முருகதாசின் வளசரவாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. டைரக்டர் கே. எஸ்., ரவிக்குமார், இத்துடன் சில தயாரிப்பாளர்கள் வீடு அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
மதுரையில் உள்ள வடிவேலு வீட்டிலும் சோதனை: சென்னையில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில், மதுரை ஐராவதம் நல்லூர் பகுதியில் உள்ள வடிவேலு வீட்டிற்கு வந்த வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். இங்கு பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இங்கிருந்தும் முக்கிய ஆவணஙகள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை கமிஷனர் வெளியிடுகிறார்: காலை முதல் அதிரடியாக நடந்து வரும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஏராளமான கணக்கில் காட்டாத ரொக்கப்பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. கணக்கில் காட்டாத சொத்து விவரம் மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்பு பணம் குறித்த விவரங்கள் இன்று மாலையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வருமான வரித்துறை கமிஷனர் வெளியிடுகிறார். சென்னையில் அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையால் திரைப்படத்துறையினர் கலங்கி போயுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக