JKR. Blogger இயக்குவது.

புதன், 6 ஜனவரி, 2010

தமிழ் இளைஞர்களின் போராட்டம் தவறானதல்ல : விக்கிரமபாகு கருணாரட்ன(பட இணைப்பு)

நாட்டில் இன்று பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டுமே காணாமல் போயுள்ளார்கள். இதற்கு மகிந்த ராஜபக்ஷவும், அவருக்கு கீழ் இராணுவத் தளபதியாக அவரது கட்டளைகளை அன்று நிறைவேற்றிய சரத் பொன்சேகாவுமே காரணம்.

இவர்களே இறுதி நேரப் போரின்போது, பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணமானவர்கள். இவர்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது" என்று ஜனாதிபதி வேட்பாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமாகிய கலாநிதி கருணாரட்ன விக்கிரமபாகு தெரிவித்தார்.

வவுனியா வசந்தம் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

"வடக்கு கிழக்கில் உள்ள வளங்களையும் மக்களையும் ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவே தமிழ் இளைஞர்கள் கிளர்ச்சி செய்தார்கள். அது தவறல்ல.

அவர்களையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் கொன்றொழித்ததன் மூலம், மனித உரிமை மீறல்களுக்கு இவர்கள் பதில் கூறியாக வேண்டும்.

எனவே தமிழ் மக்கள் அவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக் கூடாது. ஜனாதிபதி தேர்தலில் 50 வீதமான வாக்குகள் ராஜபக்ஷவோ அல்லது சரத் பொன்சேகாவோ பெறக்கூடாது என்பதற்காகவே நானும் தமிழ் மக்கள் சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கமும் போட்டியிடுகின்றோம். மக்கள் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் நடைபெற்ற காணாமல் போனோரின் பெற்றோர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.

எனினும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கண்டனக் கூட்டத்தில் தான் கலந்து கொள்வதாகக் குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் அணியின் தலைவர் அஜித் ரூபசிங்க உட்பட பலர் இங்கு உரையாற்றினர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010