சுயாட்சியென்ற தாரகமந்திரத்தின் அடிப்படையில் எதிரணியுடன் தமிழ் தேசியகூட்டமைப்பு ஒப்பந்தம் :-அரசாங்கம் அறிவிப்பு
சுயாட்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையிலேயே எதிரணியினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் புலிகளின் பிரதிநிதிகள் என்பதை மீண்டும் மீண்டும் பறைசாற்றி வருகின்றனர் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும், விடுதலைப் புலிகளுக்கு சார்பாக முன்னர் செயற்பட்டவர்களையும் நாம் படிப்படியாக விடுதலை செய்வோம். ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களை நாம் விடுவிக்க மாட்டோம்'' என்றும் அவர் கூறினார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது,
""தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதள் இன்று வரையிலான காலப்பகுதி வரை நூற்றுக்கு 61 வீதமளவில் மக்களது ஆதரவும் பங்களிப்பும் எமது பக்கமே உள்ளது. ஆரம்பத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்ட போதிலும் இப்போது நிலைமை மாறி விட்டது. எதிரணியின் பொது அபேட்சகர் அடிக்கடி வெவ்வேறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றார். கடந்த வாரம் கூறக்கூடாத இரு சொற்களை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆட்சியதிகாரத்துக்கு வரக்கூடிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஒருவர் பேசும் வார்த்தை பிரயோகங்களா, அவை என ஜெனரலிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அவரது அநாகரிகமான சொற் பிரயோகங்களால், அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்த மக்களும் இப்போது எமது ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர். எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரையிலும் ஒருபோதுமே தகாத வார்த்தைகளை பிரயோகித்தது கிடையாது. ஜெனரலின் சுயரூபத்தை மக்கள் இப்போது தெரிந்து கொண்டனர். தேர்தல் வன்முறைகளில் ஈடுபடவோ கள்ள வாக்குகளை போடவோ எமக்கு எந்த வகையிலும் அவசியம் கிடையாது. மக்களது ஆணை எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. தேர்தல் வன்முறைகளில் ஈடுபடாது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும்படி ஏற்கனவே ஜனாதிபதி தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தாம் எந்த வகையிலும் வன்முறைகளில் ஈடுபட மாட்டோம் என்பதை ஊடகங்கள் மூலமாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்படி தேசிய அடையாள அட்டை அல்லது தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தி நாட்டு மக்கள் உரிய தலைவரை தெரிவு செய்ய வேண்டும். இம் முறைத் தேர்தலில் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் சமுர்த்தி பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபா அதிகரிப்பு செய்யவுள்ளோம். இதுவரை சமுர்த்தி பெறாத கீழ்மட்ட குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களும் சமுர்த்தி நிவாரணம் பெற உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். ஒன்றரை வயதுக்குட்பட்ட வறுமை நிலையிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் 1,500 ரூபா வழங்கப்படும். வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் ஒரு இலட்ச ரூபா கடன் வழங்கப்படும். 1988, 1989 காலப் பகுதிகளில் நாட்டில் ஏற்பட்ட கலவர சூழ்நிலைகளால் கணவன்மாரை இழந்த விதவைகளுக்கும் குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணியினருடன் செய்து கொண்ட ஒப்பந்த உடன்படிக்கையானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுயாட்சி என்ற அதன் பழைய தாரக மந்திரத்தையே கொண்டமைந்துள்ளது. எந்த வகையிலும் நிபந்தனையற்ற முறையில் சம்பந்தன் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்க மாட்டார். அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், சிறைகளிலுள்ள புலிகளின் தலைவர்களை விடுதலை செய்தல் உட்பட்ட பல விடயங்களை முன்வைத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிரணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. எமது ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையில் புலிகளை உயிர்ப்பிக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்தமையினாலேயே அவர்கள் எதிரணியின் பொது அபேட்சகருக்கு ஆதரவினை வழங்கத் தீர்மானித்தனர்.
நாட்டின் தேசியத்துக்கும் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் ஆபத்து ஏற்படும் எந்தவித உடன்படிக்கைகளிலும் எமது ஜனாதிபதி ராஜபக்ஷ கையொப்பமிட மாட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பிரதிநிதிகளென மீண்டும் மீண்டும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளையும் புலிகளுக்கு சார்பாக முன்பு செயற்பட்டவர்களையும் நாம் இவ்வாரம் படிப்படியாக விடுதலை செய்து வருகின்றோம். ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் உயர் மட்ட தலைவர்களை விடுதலை செய்ய முடியாது. அது நீதிமன்றின் கையிலேயே தங்கியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று சுயாட்சியினை நாம் ஒருபோதுமே வழங்க மாட்டோம். ஒற்றையாட்சியின்கீழ் மாகாண ரீதியாக தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் எமது அரசாங்கம் வழங்கி வரும். அண்மையில் வெளிநாட்டு தொலைக் காட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே புலிகளை முறியடித்து யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தாரென கூறி விட்டு இலங்கையில் தேர்தலை முன்னிட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவே யுத்த வெற்றிக்குக் காரணம் என இரு வேறு கருத்துக்களை கூறி வருகின்றார். அது போல அண்மையில் எதிரணி பத்திரிகைகளில் பிரசுரித்திருந்த விளம்பரத்தில் அரசின் நிவாரண பொதி நாட்டில் எங்கே கிடைக்கின்றது? அரசு கூறுவது போல் பாடசாலைகளில் இலவச உணவு வழங்கப்படுவது இல்லையென பிரசுரித்திருந்தது.
ஆனால் நான் எதிரணியினருக்கு கூற விரும்புவது என்னவென்றால் நாட்டிலுள்ள சகல கூட்டுறவு கடைகளிலும் நிவாரணப் பொதிகள் தாராளமாக கிடைக்கின்றன. அதுபோல 75 பாடசாலைகளில் இலவச உணவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மக்களை திசை திருப்பவே இவ்வாறான குழப்பகரமான விளம்பரங்களை எதிரணி பத்திரிகையில் பிரசுரிக்கின்றது. ஆனால் மக்கள் அவற்றை நம்பக் கூடிய நிலையில் இல்லை. உண்மை எது பொய் எது என்ற யதார்த்த நிலையை அவர்கள் அறிந்து புரிந்து வைத்துள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதாக கூறுவதில் உண்மை எதுவும் கிடையாது. அவர் எமது ஜனாதிபதியின் அமைச்சரவையிலுள்ள அமைச்சர். அவரே புலிகளின் முக்கிய இலக்காகவும் இருந்து பல தடவைகள் உயிர் தப்பியவர். புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்காது மிக நீண்ட காலந்தொட்டு புலிகளின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர். அத்தகைய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டிய அவசியம் கிடையாது.
தேர்தலை முன்னிட்டு சகல பாதுகாப்பு நடவடிக்கையையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். 1988, 89 காலப்பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல்களில் தேர்தல்கள் ஆணையாளரால் செயற்பட முடியாத வகையில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் காட்டாட்சியால் தேர்தல் வன்முறைகளும் மோசடிகளும் அப்பட்டமான முறையில் இடம்பெற்றன. ஆனால் எமக்கு அத்தகைய தேர்தல் விதிமுறைகளை மீற வேண்டிய அவசியம் கிடையாது. 61 வீதத்துக்கும் அதிக மக்களது ஆணை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைப்பது உறுதி'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக