நான்காவது நாளாகத் தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தமது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மகசின் சிறைச்சாலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைசாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களிலும் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தப் போதும், அவை தோல்வியை கண்டுள்ளன.
எனினும் இம்முறை எவ்வாறாயினும் விடுதலை பெற வேண்டும் என்ற அடிப்படையில் தீவிரமான வகையில் தாம், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 9 பேரின் நிலைமை மிகவும் மோசமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக