ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல அனுமதி

ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு, பயங்கரவாதத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மேன்நீதிமன்றம் கடந்த வருடம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. எனினும் தற்போது அவர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுத்தகாலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் இத் தீர்ப்பிற்கு எதிராக, அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு விசாரணையில் இருக்கும் நிலையில், அவரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.
திஸ்ஸநாயகத்தை விடுவிக்கக் கோரி கடந்த சில மாதங்களாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக