கிழக்கு மாணவர்களுக்கு சைக்கிள் விநியோகம் : முதல் கட்டம் நேற்று நிறைவு

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்துள்ள மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ளது.
வட மாகாணத்தில் 500 பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்டமாக சைக்கிள்கள் வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு நடுப்பகுதியில் மூதூர் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் நிறைவடைந்தது.
இதன் பிரகாரம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த 78 மாணவர்களுக்கு கண்ணன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் நடை பெற்ற வைபவத்தில் மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோர் வைபவ ரீதியாக சைக்கிள்களை மாணவர்களுக்குக் கையளித்தனர்.
இந்த ஆண்டும் இத்திட்டத்தை இரண்டாவது கட்டமாக அமுல்படுத்த முதலமைச்சர் உத்தேசித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர்கள் தமது உரைகளின் போது தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போல், முதலமைச்சரின் மீள்குடியேற்ற இணைப்பாளர் அ.செல்வேந்திரன் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக