JKR. Blogger இயக்குவது.

புதன், 30 செப்டம்பர், 2009

புலிகளின் தலைவர்கள் சிலர் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட உள்ளனரா?


இலங்கை அரசின் தடுப்புக் காவலில் கொழும்பில் உள்ள புலித் தலைவர்கள் சிலர் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல்தீர்வின் கொழும்பு-அமெரிக்கா கூட்டுமுறையில் இணைந்து செயற்பட இணங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத சில அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிநாட்டு அமைச்சர் ரோகித பொகொல்லகமவும் இதுகுறித்து அமெரிக்காவுடன் விளக்கமாக கலந்துரையாடவே சென்றுவந்ததாகவும் கூறப்படுகிறது. புலிகளமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறைகளிலுள்ள சந்தேக நபர்கள் விவகாரங்களை அமெரிக்கா கையாளவேண்டும் என்றும் இவர்கள் இருவரும் கேட்டுள்ளனர்.

இதேவேளை செப்டம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்பட இருந்த அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற மீறல் அறிக்கையானது கோத்தபாயவின் தலையீட்டைத் தொடர்ந்தே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிறெஸ் அறிக்கை கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்கது.

போர்க்காலத்தில் பணியாற்றிய 5 வன்னி மருத்துவர்களையும் பெருமதிப்புக் கொடுத்து கௌரவிக்கவேண்டிய கட்டத்தில், இலங்கையரசு அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்ற வாக்குமூலத்தைப் பெற்றபோது சர்வதேசம் வாய்கட்டி வேடிக்கை பார்த்தது. இதற்குள் பயங்கரவாதத்தை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என அறிவதற்காக இலங்கை சட்டமா அதிபர் அமெரிக்கா பயணமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புக்காவலில் உள்ள சுமார் 15,000 புலிகளையும் சிறப்பு நீதிமன்றங்களில் நிறுத்தி விசாரணை செய்வதே இலங்கை அரசின் திட்டம் என உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.

ஆனால், போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ள முனையும் இலங்கைத் தலைமையோ தற்போது புதியதொடு முறைப்படி அமைந்த அரசியல் தீர்வுத் திட்டத்துடன் அமெரிக்காவை அணுகுவதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து அமெரிக்காவின் பதில் என்ன என்பது இன்னமும் தெரிய வரவில்லை. ஆனால் ஐ.நா நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹொன “வெற்றியீட்டியவர்களை தொந்தரவு செய்யமுடியாது’ எனக் கூறியதில் இருந்து அவர்களின் தாம் கூறுவதை அனைவரும் ஏற்க வேண்டும் என உள்ள மனப்போக்கு புரிகின்றது.

இதற்கிடையில் கொழும்பு-அமெரிக்கா தீர்வு குறித்து இந்தியாவும் கவலை கொள்வதாகத் தெரிகிறது. இந்தியாவை எப்போதுமே விரோதமாகப் பார்த்தார்கள் சிங்களவர்கள், இப்போது ஈழத்தமிழர்களும் அப்படியே பார்ப்பதால் இந்தியாவுக்கு ஏதேனும் சமூக நலன்கள் கிடைப்பதென்பது கடினமாக இருக்கும் எனவும் அவதானிகள் கூறுகிறார்கள்.

சுற்றியுள்ள நாடுகளின் நிலைப்பாடு என்னவென்றாலும், இப்போதைய செய்தி உண்மையென்றால், இதுவரை காலமும் தமிழர்களின் தேசிய அபிலாஷைகளுக்காகப் போராடிய தேசியத் தலைவரின் வழியில் சென்ற, இப்போது அரசின் பிடியிலுள்ள தலைவர்களில் யார் யார் எமது மக்களுக்கு விரோதமாக அரசு காட்டும் பதவி மோகத்துக்கு மசியப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வந்துவிடும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010