புலிகளின் சர்வதேச தலைவர் எமில்காந்தனுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பு என்ன?

இளைஞர்களுக்கான நாளை'' அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைவர்களில் ஒருவரான எமில்காந்தனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? இந்த அமைப்பிற்கு புலிகளின் சர்வதேச நிதி பயன்படுத்தப்படுகின்றதா? இக் கேள்விகளுக்கு ஜனாதிபதி அல்லது பிரதமர் 48 மணித்தியாலங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர கோரிக்கை விடுத்தார்.
புலிகளின் கறுப்புப் பணம் இன்று இளைஞர்களுக்கான நாளை அமைப்பன் மூலம் வெள்ளைப் பணமாக மாறுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பிலுள்ள பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்öப்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொது வேட்பாளரின் பேச்சாளரும் ஜே.வி.பி. எம்.பி.யுமான அநுர திஸாநாயக்காவும் கலந்து கொண்டார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டன் போது புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான எமில் காந்தன் என்பவரோடு நாமல் ராஜபக்ஷ காணப்படும் புகைப்படமொன்றும் மங்கள சமரவீர எம்.பி.யினால் காண்பிக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மங்கள சமரவீர எம்.பி. கூறியதாவது:
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. இதன்போது எமில் காந்தன், பஷில் ராஜபக்ஷ, பி.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அந்த இடத்தில் நான், ஸ்ரீபதி சூரிய ஆராய்ச்சி ஆகியோரும் சமுகமளித்திருந்தோம். அதன் பின்னர் எமில் காந்தன், பஷில் ராஜபக்ஷ எம்.பி.யோடு தொடர்ந்து உறவுகளை பேணி வந்தார். இவ்வாறு தொடர்ந்த உறவை இன்னும் அரசாங்கம் தொடர்கிறது.
இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் வேலையில்லா ஒரு இளைஞர். இவ்வாறான ஒருவர் நாளைக்கு தொலைக்காட்சி விளம்பரத்திற்காக எவ்வாறு 280 இலட்சத்தை செலவு செய்கிறார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இதுவரை இரண்டு மாத காலங்களில் விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாக்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான இளைஞர்களுக்கான நாளை அமைப்பிற்கு புலிகளின் முக்கியஸ்தர் ஊடாக அவர்களது சர்வதேச முதலீடுகளிலிருந்து பணம் கிடைக்கின்றதா? இந்த அமைப்பின் பெயரில் இலங்கையில் இருக்கும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? வெளிநாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகள் எவ்வளவு? லண்டன், பொஸ்டன், டுபாய் நாடுகளில் நாமலுக்கு எத்தனை தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கின்றன? சுவிட்சர்லாந்திலுள்ள வங்கியொன்றில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு? வெளிநாட்டு நாணயங்களில் எத்தனை கணக்குகள் இருக்கின்றன? அமைப்பிற்கும், தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும் எங்கிருந்து எப்படி, யார் மூலம் பணம் கிடைத்தது? இவை தொடர்பாக 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி அல்லது பிரதமர் பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும்.
ஏனென்றால் இது நாட்டின் தேசிய பிரச்சினை. எனவே, வெறும் கூச்சல் போடுபவர்களின் பதில்கள் எமக்கு அவசியமில்லை. சர்வதேச நாடுகளிலுள்ள புலிகளின் கறுப்புப் பணம் இன்று இளைஞர்களுக்கான நாளை அமைப்பினூடாக வெள்ளைப் பணமாக்கப்படுகிறது.
கே.பி.யை சொகுசாக தடுத்து வைத்துக்கொண்டு புலிகளின் 600 வங்கிக் கணக்குகளின் விபரங்களை அறிந்து கொண்டு அப்பணத்தையும் அரசாங்கம் செலவழிக்கின்றது.
புலிகளின் தங்கத்திற்கு என்ன நடந்தது? வங்கியிலிருந்த நகைகளுக்கு என்ன நடந்தது? சர்வதேச ரீதியில் செயல்படும் புலிகளின் தலைவரான எமில் காந்தனின் கோட்டேயிலுள்ள வீடு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. எமில் காந்தன் எங்கே? நாமலுக்கு உள்ள தொடர்பு என்ன? விடுதலைப்புலிகளோடு இன்றும் அரசாங்கம் தொடர்புகளை பேண வருவதோடு அவர்களது பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
எமது படையினர் உயிர் கொடுத்து தேசத்தை மீட்டது. ஆனால், இவர்களோ புலிகளின் பணத்தில் சொகுசாக வாழ்கின்றனர். அதேவேளை, நாட்டை காத்த தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது புலி முத்திரை குத்தி தேசத் துரோகி பட்டம் சூட்டுகின்றனர்.
புலிகளோடு தொடர்புகளை வைத்துக்கொண்டு, புலிப் பணத்தில் சொகுசாக வாழ்பவர்கள் தேசப்பற்றாளர்களா? தேசத்துரோகிகளா? என்பதை மக்கள் சிந்தித்தறிய வேண்டும்.
நாமல் ராஜபக்ஷ மற்றும் புலி உறுப்பினர் எமில் காந்தனுடனான புகைப்படம் ஜோடிக்கப்பட்டதல்ல. உண்மையானது. அதற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆயுதக் கொள்வனவு தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா மீது அரசாங்கம் சேறு பூசுகிறது. அதற்காக 2004ஆம் ஆண்டில் தமிழ் நெட் இணையத்தள செய்தியை ஆதாரமாக காட்டுகிறது.
இவையெல்லாம் பொய்யான சேறு பூச்சுக்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக