கடத்தல் அபாயம்: ஏர் இந்தியா விமானங்களில் தீவிர கண்காணிப்பு

புதுதில்லி, ஜன.22: அண்டை நாடுகளில் இயக்கப்படும் இந்தியா விமானங்களில் ஒன்றை லஷ்கர்-இ-தோய்பா அமைப்பினர் கடத்த முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சார்க் நாடுகளிலிருந்து இயக்கப்படும், குறிப்பாக, நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா விமானங்களில் ஒன்றைக் கடத்த லஷ்கர்-இ-தோய்பா, ஜமாத்-உல்-தவா அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உஷார்நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்பு தனிச்செயலர் யு.கே பன்சால் தெரிவித்தார். வெளிநாடுகளில் இயக்கப்படும் நமது விமானங்களில் ஒன்றைக் கடத்த பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என சந்தேகம் இருப்பதால் கடத்தல் முயற்சியைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைப்புகளை உஷார்படுத்தியுள்ளதாக பன்சால் தெரிவித்தார்.
இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தையும், விமான நிலைய பாதுகாப்புப் படையையும் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக