வகுப்புக்குள் அனுமதிக்க மறுத்த தலைமை ஆசிரியர்-2 மாணவிகள் தற்கொலை
திருவண்ணாமலை: தலைமை ஆசிரியர் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டதை அடுத்து மனமுடைந்த மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் இருவர் பலியாகினர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் உள்ள மேல்செங்கம் புதூர் காட்டுகொட்டாய் கிரமாத்தில் வசித்து வருபவர் வேலு. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் வேண்டாமணி (14) மேல்செங்கம் அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் ஜெயலட்சுமி (11) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (12) 7ம் வகுப்பு படித்து வந்தார்.இவர்கள் மூவரும் பள்ளிக்கு ஒன்றாகவே சென்று வந்தனர். மேலும், இவர்களது கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல எந்த பேருந்து வசதியும் கிடையாது என்பதால் மாணவிகள் நடந்தே சென்றுள்ளனர்.நேற்று அவர்கள் சற்று தாமதமாக பள்ளிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி அவர்களை பள்ளிக்கு நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டார். நாளை பள்ளி வரும் போது கண்டிப்பாக பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறியுள்ளார். வீட்டுக்கு போனால் பெற்றோர்கள் திட்டுவார்களே என பயந்த அந்த மூன்று மாணவிகளும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்தனர்.பின்னர் நீருக்குள் இருந்தபடியே கூச்சலிட்டனர். அவர்களில் வேண்டாமணி மட்டும் கிணற்றில் தண்ணீர் இறைக்க பயன்படும் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை பிடித்து கொண்டு நீருக்குள் மூழ்காமல் தப்பித்தார். மற்ற இரண்டு மாணவிகளும் பரிதாபமாக இறந்து போனார்கள்.போலீசார் இறந்த இரண்டு மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவிகளுடன் கண்டிப்பாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் பழனிச்சாமியிடம் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுருகன் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
Tags: scholl girl, commit suicide, thiruvannamalai, hm, suspend, well, பள்ளி மாணவிகள், தற்கொலை, திருவண்ணாமலை, தலைமை ஆசிரியர், சஸ்பென்ட், கிணறு.
Tags: scholl girl, commit suicide, thiruvannamalai, hm, suspend, well, பள்ளி மாணவிகள், தற்கொலை, திருவண்ணாமலை, தலைமை ஆசிரியர், சஸ்பென்ட், கிணறு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக