JKR. Blogger இயக்குவது.

சனி, 30 ஜனவரி, 2010

தேர்தல் முடிவுகளில் கணினி மயப்படுத்தப் பட்ட மோசடி சர்வதேச சமூகத்திற்கு நாம் விளக்கிக் கூறுவோம் ஐ.தே.க. அறிவிப்பு ;சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு


இறுதி தேர்தல் முடிவுகளில் கணினிமய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. உண்மையான தேர்தல் முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. எனவே இறுதி தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசிய முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. இது தொடர்பில் நாங்கள் சகல மட்டங்களிலும் தகவல்களை திரட்டிவருகின்றோம்.

தகவல்களை திரட்டியதும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் நிலைமையை விளக்கி அறிக்கை வெளியிடுவோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது

எமது கோரிக்கையை ஏற்று ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தலில் அயராது உழைத்த ஆதரவாளர்களுக்கும் மேல்மட்ட தவறான கட்டளைகளை விட்டுவிட்டு நேர்மையாக செயற்பட்ட பொலிஸ் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசிய முன்னணி முழுமையாக நிராகரிக்கின்றது.

இந்த முடிவு தொடர்பில் நாட்டு மக்கள் பாரிய சந்தேகம் கொண்டுள்ளனர். அரசாங்கமே சந்தேகம் கொண்டுள்ளது. இந்தளவு முடியுமா என்ற கேள்வி அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. எனவே பாரிய கணனி மட்ட மோசடிகள் இந்த இறுதி தேர்தல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளதாக நாங்கள் தெரிவிக்கின்றோம். தேர்தல் முடிவு திரிபுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் தேர்தல் திணைக்கள மட்டத்திலும், வாக்குகள் எண்ணப்பட்ட நிலையங்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலும், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மட்டத்திலும் நாங்கள் இந்த மோசடிகள் தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றோம். தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டதும் எமது பக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவு வெளியீட்டில் காணப்படுகின்ற கணனி மோசடி மற்றும் ஏனயை விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பான முழுயைமான அறிக்கையை தயாரித்து சர்வதேசத்துக்கு வழங்குவோம். மேலும் உள்நாட்டு மட்டத்தில் அறிவிப்போம். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க 24 மணிநேரத்தில் ( நேற்று கூறியது) நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிடுவார். அவர் கட்சி மட்டத்தில் தலைவர்களையும் வேறுபல விடயங்களையும் தற்போது ஆராய்ந்துவருகின்றார்.

இந்த தேர்தல் முடிவு மோசடி தொடர்பில் சகல மக்களும் சந்தேகம் கொண்டுள்ளதுடன் கேள்விகளை கேட்கின்றனர். நாம் முழுமையான தேர்தல் செயற்பாட்டை நோக்குவோமானால் அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறவில்லை என்று தெளிவாக குறிப்பிடுகின்றோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட விதம் உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையாளர் மற்றும் உரிய அதிகாரி ஆகிய தரப்புக்களின் சிபார்சுகளை மீறியே அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. அலரி மாளிகையில் நடத்தப்பட்ட விருந்துகள் முற்றுமுழுதாக இலஞ்சம் வழங்கியமைக்கு சமனாகும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தமை எமது அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டமை ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டமை போன்ற பல விடயங்களை இங்கு கூற முடியும். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகிய தினம் ஜெனரல் சரத் பொன்சேகா சுதந்திரமாக நடமாட முடியாதவாறு சிறைவைக்கப்பட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி ஜெனரலின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மண்டியிட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மொத்த செயற்பாடுகளையும் பார்க்கும்போது தேர்தல் தினத்தன்று அமைதி நிலைமை காணப்பட்டது என்று கூறிவிட முடியாது.

வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளால் செல்ல முடியவில்லை. பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன. எனவே எவ்வாறு நாங்கள் தேர்தல் முடிவுகளை நம்புவது? இறுதி அறிவிப்பை மேற்கொண்ட தேர்தல் ஆணையாளரின் கூற்றில் காணப்பட்ட நிலையற்ற தன்மையை நாங்கள் அவதானித்தோம். எனவே தேர்தல் முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறுகின்றோம்.

குண்டசாலை தொகுதியில் வாக்களிப்பு நிலையங்களின் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்படும்போது கட்சிகளின் பிரதிநிதிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்படும்போது அவை தனிமைப்படுத்தப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தினத்தன்று மாலை 7. 15 மணிக்கே எமது பிரதிநிதிகளுக்கு பெட்டிகளுடன் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. அங்கே பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. எனவே உள்ளக ரீதியில் பாரிய வேலைத்திட்டம் ஒன்று காணப்பட்டுள்ளது என்பதனை தெரிவிக்கின்றோம். கணனி மோசடி இடம்பெற்றுள்ளது என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை 26000 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இம்முறை குறித்த 26 ஆயிரம் வாக்குகளும் ஜனாதிபதிக்கே சென்றுள்ளன. இது எவ்வாறு சாத்தியம்? எனவே இவ்விடயங்கள் குறித்து சில தினங்களில் முழுமையான அறிக்கையை தயாரித்து உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சமர்ப்பிப்போம். நீதிமன்றத்துக்கும் செல்வோம்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் தினத்தன்று குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் வாக்களிப்பதை தடுக்க முயற்சிக்கப்பட்டது. காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை ஒருசிலரே வாக்களித்தனர். தமக்கு வாக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் வாக்களிப்பதை தடுக்க முயற்சித்தனர். மீண்டும் அந்த மக்களை எந்த நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றது? வவுனியாவில் அகதி மக்களுக்கு வாக்களிப்பதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. மேலும் நாவலப்பிட்டி கம்பளை ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது எமது தரப்பினரை அரசாங்கம் பழிவாங்க முயற்சிக்கின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் அச்சுறுத்தப்பட்டுள்ளார். எமது தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. இவை மனித உரிமைகளை மீறும் செயல்களாகும். எதிர்க்கட்சி தரப்பினர் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

தற்போதும் அரச ஊடகங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சேறுபூசிக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் முடிந்துவிட்டது என்பதனை அரசாங்கம் உணரவேண்டும். தற்போது தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். எனினும் தேர்தல் முடிவு தொடர்பில் அரசாங்கத்துக்கே நம்பிக்கையில்லாத நிலைமை காணப்படுகின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகா 40 நாட்கள் அரசியல் செய்து 40 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தம்மிடம் காணப்படுகின்ற தகவல்களை எங்களுக்கு வழங்குங்கள். தேர்தல் அதிகாரிகள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். நாங்கள் விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி: அமைதியான தேர்தல் நடைபெறவில்லை என்று கூறுகின்றீர்களா?

பதில்: மொத்த தேர்தல் செயற்பாடுகளையும் பார்க்கும்போது அமைதியான நீதியான தேர்தல் நடைபெறவில்லை.

கேள்வி: அப்படியானால் உங்கள் கட்சிக்குள் பரஸ்பரம் முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்படுகின்றனவா?

பதில்: அப்படியில்லை. எந்தவிதமான பரஸ்பரம் விரோதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அமைதியான தேர்தல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளாரே?

பதில்: இல்லை. ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை நீங்கள் சரியான விளங்கிக்கொள்ளவேண்டும். மாலை நான்கு மணிவரை வாக்களிப்பு நிலையங்களில் பாரிய அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்றுதான் அவர் கூறியிருந்தார்.

கேள்வி: அப்படியானால் வாக்குச் சாவடிகளில் கள்ள வாக்கு இடப்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்: அவ்வாறு முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிப்பு மற்றும் நாவலப்பிட்டி ஹங்குரென்கெத்த ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அரசாங்கத்தினால் மறுக்க முடியுமா?

கேள்வி: அப்படியானால் எவ்வாறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன?

பதில்: கணனி மட்டத்தில் மிகவும் சூட்சுமமாக இடம்பெற்றுள்ளன

. கேள்வி: சட்டநடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்?

பதில்: இல்லை. சட்டநடவடிக்கை எடுப்பதற்கு 21 நாட்கள் உள்ளன. அதற்குள் நாங்கள் தேவையான தகவல்களை பெற்று நடவடிக்கை எடுப்போம். தற்போது தான் ஓய்வு பெறப்போவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் உடனே ஓய்வு பெற முடியாது. காரணம் தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கவில்லை.

கேள்வி: இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: தகவல்களை பெற்றுக்கொண்டு சர்வதேசம் மற்றும் உள்நாட்டுக்கு அறிவிப்போம். சட்ட நடவடிக்கையும் எடுப்போம். தற்போதைக்கு தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

கேள்வி: தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளனவே? மேலும் ஐக்கிய நாடுகள் சபையும் அதேபோன்று தெரிவித்துள்ளதே?

பதில்: கண்காணிப்பு குழுக்களின் முழுமையான அறிக்கையை வாசியுங்கள். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் அறிக்கைகளை முழுமையாக வாசியுங்கள்.

கேள்வி: இவை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க ஏன் இதுவரை அறிக்கை விடுக்கவில்லை?

பதில்: ரணில் விக்ரமசிங்க இதுவரை கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார். 24 மணிநேரத்தில் (நேற்று) அவர் ஊடகங்களை சந்திப்பார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010