JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை ஐ.தே.க.வினால் நிராகரிப்பு


நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010