செய்தியறிக்கை
| |
ஹமித் கர்சாய் அதிபராக அறிவிக்கப்பட்டார் |
ஆப்கான் அதிபராக ஹமீத் கர்சாய் அறிவிக்கப்பட்டார்
ஆப்கன் அதிபர் பதவிக்கான மறுதேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ள அந்நாட்டின் தேர்தல் ஆணையம், இந்தத் தேர்தலின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற ஹமித் கர்சாய் அவர்களை அடுத்த அதிபராக அறிவித்துள்ளது.
மறுதேர்தலில் போட்டியிட்ட ஒரே எதிர்க்கட்சி வேட்பாளரான அப்துல்லா அப்துல்லா அவர்கள், தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்பு வந்திருக்கிறது.
முதல் சுற்றில் நடந்த தேர்தல் முறைகேடுகள் இரண்டாவது சுற்றிலும் நடக்கலாம் என்று அச்சம் தெரிவித்திருந்த அப்துல்லா அவர்கள் அதனால் மறு தேர்தலில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்திருந்தார்.
கர்சாய் அவர்கள் மீண்டும் தேர்வாகியிருப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐநா மன்ற பொதுச்செயலாளர் பான்கி மூன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், இந்தத் தேர்தலின் முதல் சுற்றில் நடந்த முறை கேடுகளைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைமுறைகளின் சட்ட அங்கீகாரம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகள், மறு தேர்தல் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டு விட்டதோடு தீர்ந்து விடுமா என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாக காபூலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பாகிஸ்தான் குண்டுத்தாக்குதல்: 35 பேர் பலி
| |
இறந்தவர்களுக்கு அஞ்சலி |
அங்கு ஆயுததாரிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் வரிசையில் இந்தத் தற்கொலைத் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு வங்கிக்கு வெளியே மக்கள் வரிசையில் நின்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் தம்மைத் தாமே வெடிக்க வைத்துக் கொண்டனர்.
இந்தத் தாக்குதல் மக்கள் நெருக்கடி உள்ள ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களில் மட்டும் தாலிபான்கள் மீது குற்றம் சுமத்தப்படும் தாக்குதலில் பாகிஸ்தானில் 300 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு நிலைமகள் மோசமடைந்து வருவதால் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளில் தமது பணிகளை இடை நிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே லாகூர் பகுதியில் வாகனச் சோதனைச் சாவடி ஒன்றில் சோதனைக்காக ஒரு வாகனம் நிறுத்தப்பட்ட போது அதில் இருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தம்மைத்தாமே வெடிக்க வைத்துக் கொண்டதில் அவர்கள் இருவரும் பலியாகியுள்ளனர்.
இதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பழங்குடியின நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது
| |
பாகிஸ்தான் இராணுவம் |
தாலிபான்களுக்கு எதிராக பெரிய அளவிலான நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெற்கு வாஸிரிஸ்தான் பகுதியில் இருக்கும் தாலிபான்களின் நடவடிக்கை தளமாக விளங்கிய கனிகரம் நகரை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அங்கிருந்த கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நகரை இராணுவம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றாலும், இதை இறுதி வெற்றி என்று கூறமுடியாது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
தாலிபான்கள் கெரில்லா வகையில் போர் புரிவதால் அவர்கள் நிலபரப்புகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை குறிக்கோளாக கொள்ளவில்லை என்றும் செய்தியாளர்கள் மேலும் கூறுகிறார்கள்.
பாகிஸ்தானில் வெளியான இன்றைய தினசரிகளில் தாலிபான்களின் மூன்று முக்கிய தலைவர்கள் மற்றும் இதர 15 தளபதிகளைப் பிடிப்பதற்கு துப்பு கொடுப்பவர்களுக்கு ஐந்து மில்லியன் டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவெரஸ்ட்டில் அமைச்சரவைச் சந்திப்பு
| |
எவெரஸ்ட் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் ஐயாயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் எவெரெஸ்ட் சிகரத்தில் அடிவார முகாமுக்கு, இந்த மாத இறுதியில் நேபாள அமைச்சர்கள் அனைவரும் பயணிக்க இருப்பதாக வனத்துறை அமைச்சர் தீபக் பெஹரா அவர்கள் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் கோபன்ஹேகனில் நடக்க இருக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு முன்னதாக இவர்கள் அங்கே செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இதே போன்று பருவநிலை மாற்றத்தின் பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் நோக்கில் மாலத்தீவுகள் அரசும் கடந்த மாதம் தனது அமைச்சரவை கூட்டத்தை கடலுக்கு அடியில் நடத்தியிருந்தது.
பருவநிலை மாற்றம் காரணமாக, இமயமலையின் பனிப் பாறைகள் ஆபத்தான வேகத்தில் உருகிவருவதாக வல்லுனர்கள் ஏற்கெனவே எச்சரித்து வருகிறார்கள்.
| |
இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா |
சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ''ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்'' என்று கூறினார்.
| |
கோத்தபாய ராஜபக்ஷ |
அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.
இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், '' நான் அப்படி நினைக்கவில்லை'' என்று பதிலளித்தார்.
தமிழக அகதி முகாம்களை மேம்படுத்த மாநில அரசு முடிவு
| |
சந்திரஹாசன் |
இம்முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாததன் காரணமாக அகதிகள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானதன் பின்னணியில், முகாம்களின் நிலை குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அவசரக் கூட்டமொன்றை தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார்.
அதேவேளை, ஏற்கனவே செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகளுக்காக அகதிகள் நன்றிக்கடன்பட்டவர்களென்று தெரிவித்த ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழக நிறுவனர் சா.செ.சந்திரஹாசன், சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக்குடியுரிமை வழங்குவது என்ற ஆலோசனை குறித்து தம் மக்களிடம் பேசிவருவதாகவும், அவர்களுடனான கலந்தாய்விற்கு பிறகே தங்களால் இறுதி முடிவு எதுவும் எடுக்கமுடியும் என்றும் சந்திரஹாசன் தெரிவித்தார்.
கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு விபத்து: 23 பேரைக் காணவில்லை
| |
அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் என்று நம்பப்படும், 17 பேர் அந்த வழியே திரவ வாயுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய பிராந்தியத்தைச் சேர்ந்த கொக்கோஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கும், இலஙங்கைக்கும் இடையே இருக்கின்றன.
உயிர் தப்பியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான பணியில் ஆஸ்திரேலிய றோயல் ஃபிளயிங் டாக்டர் சேவையின் ஜெட் ஒன்றும் ஈடுபட்டுள்ளது.
இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தப் பிராந்தியத்தில் தற்போது வழமையாகிவருவதாக இந்த ஃபிளயிங் டாக்டர் சேவையைச் சேர்ந்த ஸ்டீபன் லாங் ஃபோர்ட் கூறியுள்ளார்.
எவரும் இலகுவில் செல்லாத இந்து மகா சமுத்திரத்தின் அந்தப் பகுதியில், இந்த சிறிய படகு மூழ்கத்தொடங்கிய போது இருளத்தொடங்கிவிட்டது.
அந்தப் படகில் வந்தவர்கள் பெரும்பாலும் அகதிகளாக தஞ்சம் கோரிச்சென்றவர்களாக இருக்கக் கூடும்.
சுமார் 17 பேர் வரை தாய்வான் நாட்டுக் கப்பலால் மீட்கப்பட்டாலும் ஏனைய பலரை இன்னமும் காணவில்லை.
தாம் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 30 படகுகளில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக