JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 20 நவம்பர், 2009

செய்தியறிக்கை


காங்கோ மோதல்கள் காரணமாக ஐம்பதாயிரம் பேர் இடம்பெயர நேர்ந்துள்ளது

இடம்பெயருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
காங்கோ ஜனநாயக குடியரசின் வடக்கில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேறியிருப்பதாக ஐ.நா.மன்றத்தின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்படி வெளியேறியிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், அண்டையில் இருக்கும் காங்கோ பிராஸ்ஸவீல் நாட்டுக்குள் சென்றிருப்பதாக, யு.என்.எச்.சி.ஆர். என்கிற ஐ.நா.மன்றத்தின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களின் பலர் பெரியவர்கள் துணையின்றி ஓடிவந்த சிறார்கள்.

கடந்த மாதம் ஆரம்பித்த இந்த மோதல்களில் இதுவரை குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.மன்ற அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கோவின் கிழக்கில் நடந்து வரும் நீண்ட நாள் மோதல்களுக்கும் இந்த தற்போதைய மோதல்களுக்கும் தொடர்பு இல்லை.

ஐ.நா.மன்றத்தின் அமைதிப் படையினரின் உதவியை காங்கோ அரசாங்கம் கோரியிருக்கிறது. ஆனால் இதுவரை சுமார் 30 பேர் வரை மட்டுமே அந்த பிராந்தியத்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


பந்தய ஊழலில் ஐரோப்பிய கால்பந்தாட்டம்

ஜெர்மனியில் வியாழனன்று நடந்த தொடர்ச்சியான கைதுகளுக்கும், சுமார் 200 ஐரோப்பிய கால்பந்து ஆட்டங்களின் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டமை குறித்த ஊழலுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து தாம் புலனாய்வு செய்வதாக ஜெர்மனிய அரச சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

இவற்றில் மூன்று ஆட்டங்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்குரியதாகும், 12 ஆட்டங்கள் ஐரோப்பிய லீக் சுற்றுப் போட்டிக்காக ஆடப்பட்டவையாகும்.

பொலிஸாரால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தேடுதல்களில், 15 பேர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டனர். ஸ்விட்சர்லாந்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டங்களின் முடிவுகளில் ஆளுமை செலுத்தியவர்கள், மற்றும் சூதாட்டக் களங்களில் இந்த ஆட்டங்களின் முடிவுகள் குறித்து பந்தயம் கட்டியவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.


எகிப்தில் கால்பந்தாட்ட ரசிகர்கள் பொலிசார் இடையே மோதல்

கெய்ரோவில் அல்ஜீரிய தூதரகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதில் இருந்து தடுக்கப்பட்ட எகிப்திய கால்பந்து ரசிகர் கூட்டம் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

சுடானில் உலகக்கிண்ண ஆட்டத்தில் எகிப்திய அணியால், அல்ஜீரிய அணி தோற்கடிக்கப்பட்டதை அடுத்து எகிப்திய விளையாட்டு ரசிகர்கள், அல்ஜீரிய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெய்ரோவில் தமது ரசிகர்கள் தாக்கப்பட்டது குறித்தும், தமது அணியினர் சென்ற வாகனத்தின் மீது கல்வீசப்பட்டது குறித்தும் அல்ஜீரியா கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தது.


சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் தமது வல்லமையை பெருக்கிக்கொள்ள இந்திய அரசு திட்டம்

உத்திரப் பிரதேச கிராமத்தில் சூரிய சக்தியில் மின்சாரம் உற்பத்தி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது
சூரிய சக்தியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை பலமடங்கு அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது.

இதன் மூலம் இந்தியாவில் சூரிய சக்தியிலிருந்து தற்போது பெறப்படும் மின்சாரத்தின் அளவை அடுத்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய ஆயிரம் மடங்கு அதிகரிப்பதற்கு இந்தியா திட்டமிடுகிறது.

இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவானது, இந்தியாவின் பல பெருநகரங்களின் தற்போதைய மின்சாரத் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு இருக்கும்.

வேகமாக அதிகரித்துவரும் தனது மின்சாரத்தேவைகளுக்கு நிலக்கரியை நம்பியிருக்கும் நிலைமையை குறைக்கவேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது.

மேலும் சூரிய மின்சாரத்தயாரிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் தொழிற்துறையை வளர்க்கவும் இந்திய அரசு விரும்புகிறது.

செய்தியரங்கம்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
ஈ.பி.டி.பி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களிடையே ஸ்விட்சர்லாந்தில் கூட்டம்

இலங்கையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி இணக்கப்பாடு காண்பதற்காக இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் கூடியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்ந்தர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் கட்சியின் தலைவர் ரவூஃப் ஹக்கிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர் தகவல் நடுவம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சிறுபான்மையினரைப் பாதிக்கும் பல்வேறு விடயங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டைக் காண்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தமிழோசையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.


இராணுவ வெற்றியைக் குறிக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு தொடர்பில் புதிய சர்ச்சை

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கு முன் பெறப்பட்ட இராணுவ வெற்றியை குறிக்கும் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகான பலவண்ணங்களில் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதன் ஒரு பக்கத்தில், பாதுகாப்புப் படையினர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் அதிபர் ராஜபக்ஷ அவர்கள், வெற்றியை குறிக்கும் விதமாக கையை உயர்த்திக்காட்டும் படம் அச்சிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட ரூபா நோட்டு ஒன்று வெளியிடப்பட்டமை வெட்கம் கெட்ட செயல் என்று முக்கிய எதிர்கட்சி அரசியல்வாதியான மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.

உயிருடன் இருக்கும் அரசியல் தலைவர் ஒருவரின் படம் ரூபாய் நோட்டில் அச்சிடப்படுவது அசாதாரணமான ஒரு நிகழ்வு என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

ஆனால் சமரவீராவின் இந்த குற்றச்சாட்டுக்கள் பொறாமையின் விளைவாக சொல்லப்படுபவை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் காப்ரால் கூறியுள்ளார்.


நேபாள மிருக பலி திருவிழா: முன்னாள் கனவுக் கன்னி கண்டனம்

இத்திருவிழாவில் லட்சக்கணக்கான மிருகங்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன
நேபாளத்தில் விரைவில் நடக்கவுள்ள இந்து திருவிழா ஒன்றின்போது பல்லாயிரக்கணக்கான விலங்குகள் பலிகொடுக்கப்படுவதை நேபாள அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸின் முன்னாள் சினிமா நட்சத்திரமும் மிருக வதைத் தடுப்பு ஆர்வலருமான பிரிஜீத் பார்தோ வலியுறுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற காதி மாய் துர்க்கை அம்மன் திருவிழாவிற்காக நேபாளத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவின் சில இடங்களிலிருந்தும் கூடுகின்ற பக்தர்கள், 5 லட்சம் வரையிலான கால்நடைகளையும் விலங்குகளையும் பலி கொடுக்கவிருப்பதாகத் தெரிகிறது.

இந்த மிருக பலி சடங்கை எதிர்த்து மிருக உரிமைகள் மற்றும் புத்த மத குழுக்கள் ஏற்கனவே அழுத்தம் தந்துவரும் நிலையில், இந்த திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். துர்க்கை அம்மனின் ஒரு வடிவமான காதி மாய் என்ற பெண் தெய்வத்தை திருப்திப்படுத்துவதற்காக லட்சக்கணக்கான மிருகங்கள் பலிகொடுக்கப்படுகின்றன.

மிருகங்களை பலி கொடுத்தல் என்பது, தீங்குகள் நீங்கி வளம் பெருக உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் இது காட்டுமிராண்டித்தமான, காலத்துக்கு ஒவ்வாத செயல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


30 ஆயிரம் ரன் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த டெண்டுல்கர் உலகிலேயே முப்பதினாயிரம் ரன்களை பெற்ற முதலாவது ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

அகமதாபாத் டெஸ்ட் ஆட்டம் சமனில் முடிவடைந்துள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் 426 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி அதனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட் இழப்புக்கு 412 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி அதனது முதலவாது இன்னிங்ஸில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 760 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010