JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

செய்தியறிக்கை


அமெரிக்க பொருளாதாரம்
அமெரிக்க பொருளாதாரம் கடந்த ஓராண்டாக சுருங்கி வந்தது

மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்கப் பொருளாதாரம்

அமெரிக்காவில் இருந்து வருகின்ற புதிய தரவுகள், அந்த நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் முதல் தடவையாக வளருவதைக் காண்பிக்கின்றன.

ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடையில் வருடாந்தம் 3.5 வீதம் என்ற அளவில் அது வளர்ந்துள்ளது.

பல நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட இந்த வளர்ச்சி அதிகம் என்பதுடன், இரண்டு வருடங்களின் மிகவும் அதிகமான வளர்ச்சி வீதமும் இதுவாகும்.

உலகின் பெரிய பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்றது என்பதை இந்த தரவுகள் காண்பிக்கின்றன.

ஆனால், அரசாங்கத்தால் செலவிடப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களால் ஆன ஊக்கச் செலவினங்களுக்கு மத்தியில், இந்த வளர்ச்சி நிலைக்கக்கூடியதாக இருக்குமா என்று பிபிசி செய்தியாளர் சந்தேகம் எழுப்புகிறார்.


ஐ.நா.வின் சிறப்பு புலனாய்வாளருக்கு ஜிம்பாப்வேயில் நுழைய அனுமதி மறுப்பு

மன்பிரட் நோவாக்
ஜிம்பாப்வேயில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, இது தொடர்பாக தான் ஒரு கடுமையான வார்த்தைகள் கொண்ட ஒரு புகாரை அளிக்க உள்ளதாக சித்திரவதை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு புலனாய்வாளர் மன்பிரட் நோவாக் கூறியுள்ளார்.

நாட்டின் பிரதமர் மார்கன் ஸ்வாங்கராய் அனுப்பிய வரவேற்புக் கடிதம் இருந்த நிலையிலும், நோவாக் அவர்கள் ஹராரே விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்டார். பிறகு தென் ஆப்பிரிக்க செல்லும் ஒரு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார்.

சித்திரவதை, இழிவாக நடத்தப்பட்டது போன்றவை தொடர்பாக கூறப்படும் புகார்கள் பற்றிய ஆதாரங்களைப் பெற தான் வேறு வழிகளை நாடப்போவதாகவும் நாவாக் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வேயில் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரசை தற்போது புறக்கணித்து வரும் ஸ்வங்கராயின் ஜனநாயக மாற்றத்துக்கான கட்சி இவரது வெளியேற்றத்தை ஒரு பொறுப்பற்ற செயல் என்றும் நியாய மற்ற செயல் என்றும் வர்ணித்துள்ளது.


பாக்தாத் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இராக்கில் பாதுகாப்புப் படையினர் கைது

திங்களன்று குண்டுவெடிப்பு நடந்த இடம்
பாக்தாதில் திங்களன்று நடந்த இரட்டை தற்கொலைத் தாக்குதல்களில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது தொடர்பில் இராக் 60க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரைக் கைது செய்துள்ளது.

அந்தக் குண்டுகள் வெடித்த இடத்தில் பணியில் இருந்தவர்களே கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

குண்டு வெடிப்புகள் அதிகரித்து வருவது, பாதுகாப்புப் படையினரின் திறன் குறித்தும், கிளர்ச்சிக்காரர்களின் ஊடுறுவலுக்கு அவர்கள் மத்தியில் எந்த அளவுக்கு இடம் இருக்கிறது என்பது குறித்தும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் பங்களிப்பு மேலும் தேவைப்படுகிறது என்பதையே இந்தக் குண்டு வெடிப்புகள் உணர்த்துவதாக இராக்கிய வெளியுறவு அமைச்சர் ஹொஷையர் ஷெபாரி கூறியுள்ளார்.


சீதோஷ்ண நிலை மாற்றம்: ஐரோப்பியத் தலைவர்கள் கூட்டம்

பிரஸ்ஸல்ஸில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான லிஸ்பன் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, காலநிலை மாற்றம் குறித்த புதிய ஒப்பந்தங்களுக்கு எவ்வாறு நிதி வழங்குவது என்பது தொடர்பிலான கருத்து வேறுபாடுகளைக் களையும் நோக்கிலான ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரசல்ஸில் கூடுகிறார்கள்.

புவி வெப்பமடைவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தூய்மையான தொழில் நுட்பங்களைப் பெறும் நோக்கில், வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒவ்வொன்றும் எவ்வாறு நிதியளிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஒன்றிய உறுப்பு நாடுகள் மத்தியில் கருத்து முரண்பாடு தொடருகிறது.

டிசம்பரில் கோபன்ஹேகன் காலநிலை மாநாட்டை நடத்தவுள்ள டென்மார்க் நாட்டின் பிரதமர் லார்ஸ் லொக்கே ராஸ்முசன் அவர்கள், புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ரீதியாக கட்டுப்படுத்தப்படக் கூடிய சர்வதேச உடன்படிக்கை ஒன்றை இந்த மாநாட்டில் எட்டுவது சாத்தியம் என்று தான் நம்பவில்லை என்று கூறுகிறார்.


முன்னணி நிறுவனங்கள் பணம் கொடுத்து வந்ததை இந்தியாவில் சரணடைந்த மாவோயியத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்

இந்திய மாவோயிஸ்டுகள்
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் தம் வர்த்தகம் தொடர்பாக ஈடுபாடு கொண்ட முன்னணி நிறுவனங்களிடம் இருந்து தாம் தொடர்ந்து பணம் பெற்று வந்ததாக சரணடைந்த மவோயிய தலைவர் ஒருவர் தடுப்பு விசாரணையின்போது ஒப்புக்கொண்டதாக இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ள ரவி சர்மா, பல பெரிய இந்திய நிறுவனங்கள் மவோயியத் தீவிரவாதிகளுக்கு கப்பம் செலுத்தியதாக கூறியிருக்கிறார்.

ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களில் மவோயிஸ்டுகளின் தலைவராக செயல்பட்டு வந்திருந்தவர் ரவி சர்மா ஆவார்.

மவோயிஸ்டுகள் பெரிய நிறுவனங்களின் அதிகாரிகளை தாக்காமல் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்துத் தாக்கினார்கள் என்பதை இந்த ஒப்புதல் சற்றே விளக்குவதாகக் கொள்ளலாம் என்று பிபிசி நிருவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

செய்தியரங்கம்
மோதல் சம்பவக் காட்சி
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மூண்ட மோதலில், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டிருந்தனர்

வழக்கறிஞர்கள்-பொலிசார் மோதல் விவகாரம்: காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 19ஆம் நாளன்று நடந்த மோதல் சம்பவத்திற்கு நான்கு உயர் போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு எனக்கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் தற்போதைய சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யுமான ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணயர் ராமசுப்பிரமணியன் மற்றும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் மீது துறை-ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி மீது முட்டை எறிந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் சிலரைக் கைதுசெய்ய போலீஸார் உயர்நீதிமன்ற வளாகத்திற்குச் சென்றபோதுதான் இந்தப் பெரிய மோதல் மூண்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்திரவின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துவந்தது.

ஏறத்தாழ 20 நாட்கள் விசாரணைக்குப்பின் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது.


இந்தோனேஷியாவில் படகிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முடிவெடுப்பதில் சிக்கல்


இலங்கை அகதிகளை சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இரண்டு படகுகள் இந்தோனேஷியாவில் இருவேறு இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அகதிகளை என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் இந்தோனேஷிய அரசாங்கம் திணறிவருகிறது.

இந்த இரண்டு படகுகளில் உள்ள அகதிகள் அனைவருமே தாங்கள் ஆஸ்திரேலியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு படகை விட்டுக் கீழிறங்க மறுத்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலானதொரு பிரச்சினையாக இவ்விவகாரம் உருவெடுத்துவருகிறது.

இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும் இந்த அகதிகள் தொடர்பில் கொள்கை அளவில் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

அந்த உடன்பாட்டின்படி இந்தோனேஷியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு இந்த அகதிகளில் சிலராவது செல்ல வேண்டிவரும் என்றிருந்தது.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் போலிஸ் அத்துமீறல்கள் தொடர்பாக கவலைகள் அதிகரித்துவருகின்றன

இலங்கை பொலிஸ்துறை சின்னம்
இலங்கையில் சிலகாலமாக போலீஸ் தடுப்புக்காவலில் இருந்தவர்கள் உயிரிழக்க நேரிட்ட சம்பவங்கள் வரிசையாக நடந்துள்ள நிலையில், அந்நாட்டின் போலீஸ் அத்துமீறல்கள் மீது கவனம் குவிந்துள்ளது.

இந்த ஒரு வருடத்தில் மட்டும் தடுப்புக்காவலின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

குற்றக்கும்பல்களை ஒடுக்கும் நடவடிக்கையாக போலிசார் மேற்கொண்ட காரியங்களுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

உள்நாட்டுப் போர் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், பாதுகாப்பு படையினர் புதிய எதிரிகளை தேட ஆரம்பித்துவிட்டனர் என்றும்கூட சிலர் விமர்சித்துள்ளனர்.

இலங்கையில் பொலிசாரும் படையினரும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு நிலைமையே நீடித்துவருகிறது.

இது குறித்த பெட்டக நிகழ்ச்சி ஒன்றை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010