JKR. Blogger இயக்குவது.

திங்கள், 9 நவம்பர், 2009

செய்தியறிக்கை


உரும்சீ நகர கலவரம் தொடர்பில் மொத்தம் 21 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது
உரும்சீ நகர கலவரம் தொடர்பில் மொத்தம் 21 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது

சீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை

சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் இடம் பெற்ற இனக் கலவரங்கள் தொடர்பில் அங்கு ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் அப்போது இடம் பெற்ற வன்முறையில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட ஒன்பது ஆடவர்களுக்கு கடந்த சின தினங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீன அரசுக்கு சொந்தமான சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியின் மாகாண அரசின் பேச்சாளர், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஜின் ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்குயில் உள்ளூர் பூர்வகுடி வீகர்கள் மற்றும் ஹன் சீன சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் சுமார் 200 பேர் பலியாயினர்.


ஜிம்பாப்வேயில் பிரதமர் சாங்கிராயின் சகாவுக்கு எதிரான வழக்கு ஆரம்பம்

றோய் பென்னட்
ஜிம்பாப்வே பிரதமர் மோர்கன் சாங்கிராயின் நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஹராரே நகரில் ஆரம்பமாகி ஒத்திவைக்கப்பட்டன.

சாங்கிராயின் ஜனநாயக மாற்றத்துக்கான அமைப்பைச் சேர்ந்த றோய் பென்னட் என்ற அவர் மீது கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் சதி ஆகியவை குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவை நிரூபிக்கப்படுமாயின் அவருக்கு மரண தண்டனையும் கிடைக்கலாம்.

பென்னட் அவர்கள் துணை விவசாய அமைச்சர் ஆவதை தடுக்கும் நோக்குடன் இந்த குற்றச்சாட்டுக்கள் ஜோடிக்கப்பட்டிருப்பதாக ஜனநாயக மாற்றத்துக்கான அமைப்பு கூறுகிறது.

அரச தரப்பு சாட்சியாக உள்ள ஒருவர் அளவுக்குஅதிகமாக சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுகின்ற பென்னட் தரப்பு சட்டத்தரணிகள், அந்த சாட்சி விசாரணையில் இருந்து தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளின் வாதம் புறந்தள்ளப்பட வேண்டும் என்று அரச சட்டத்தரணிகள் கூறுகிறார்கள்.


காட்பரியை கையகப்படுத்தும் முயற்சியில் க்ராஃப்ட்

அமெரிக்காவின் மிகப்பெரிய உணவு நிறுவனங்களில் ஒன்றான கிராஃப்ட் பிரிட்டிஷ் நிறுவனமான காட்பரியை பலவந்தமாக கையகப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தற்போது அந்த நிறுவனம் காட்பரி நிறுவனத்தின் மதிப்பு 16.4 பில்லியன் டாலர்கள் என கணக்கிட்டு அதை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் காட்பரி நிறுவனத்தை கையகப்படுத்த, தற்போதைய தொகையை விட உயர்ந்த அளவான 16.6 பில்லியன் டாலர்கள் முன்வைக்கப்பட்டபோது அதை காட்பரி நிராகரித்தது.

அதன் பிறகு காட்பரி நிறுவனத்தின் பங்குகளின் விலை விரைவாக உயரத் தொடங்கியது.

தற்போது தமது நிறுவனத்தை கையேற்பதற்கு அளிக்க முன்வந்துள்ள தொகையானது, தங்களது நிறுவனத்தின் உண்மையான மதிப்பினை வெளிப்படுத்தும் வகையில் சிறிதளவும் தொடர்பில்லாத நிலையில் உள்ளது என்று காட்பரி நிறுவனம் கூறியுள்ளது.

காட்பரி நிறுவனத்தை கையகப்படுத்த இன்று திங்கட்கிழமை அமெரிக்காவின் கிராஃப்ட் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை ஒரு நீண்ட நடைமுறையின் துவக்கமே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


இரானில் அவய துண்டிப்பு தண்டனை வரவேண்டும் என்கிறார் காவல்துறை மூத்த அதிகாரி

இரானில் உயர்ந்து வரும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் குற்றவாளிகளின் கைகளை துண்டிக்கும் தண்டனையை நீதிமன்றங்கள் விதிக்க வேண்டும் என்று அந்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கோரியுள்ளார்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் உடல் உறுப்புகளை துண்டிப்பது என்பது முக்கியமான பகுதி என்றும், ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்றும் அஸ்கர் ஜாஃப்ரி எனும் அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரானில் ஷரியா சட்டம் அமல் செய்யப்பட்டால் அங்கு 90 சதவீதமான திருட்டுச் சம்பவங்கள் இடம் பெறாது என்றும் ஜாஃப்ரி கூறியுள்ளார்.

அங்குள்ள நீதிமன்றங்களுக்கு ஒருவர் தொடர்ச்சியாக திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டார் என்றால், அவரது கைகளை வெட்டுவதற்கு நீதிமன்றங்கள் உத்தரவிடலாம் என்றாலும், கடந்த சில காலங்களாக அப்படியான உத்தரவுகள் அரிதாகவே பிறப்பிக்கப்படுகின்றன.


அருணாச்சல பிரதேசத்தில் தலாய் லாமாவின் உரையைக் கேட்க ஏராளமானோர் கூடியுள்ளனர்

தலாய் லாமா
திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் உரையைக் கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான திபெத்திய இனத்தவர்கள் இந்தியாவின் வடகிழக்கே உள்ள இலகுவில் சென்றடைய முடியாத நகரம் ஒன்றுக்கு சென்றுள்ளார்கள்.

நாடுகடந்து இந்தியாவில் வாழ்கின்ற தலாய் லாமா அவர்கள், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் என்னும் நகருக்கு ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என்று கூறுகிற சீனா, தலாய் லாமாவின் இந்த விஜயத்தால் ஆத்திரம் அடைந்துள்ளது.

தலாய் லாமாவின் உரையைக் கேட்பதற்காக பலர் பல நாட்கள் பயணித்து வந்துள்ளதாக கூறுகின்ற அங்குள்ள பிபிசி செய்தியாளர், அருகே பூடானில் இருந்தும் மக்கள் வந்திருப்பதாகவும் கூறுகிறார்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பதற்றத்தை தூண்டும் முயற்சியாக இந்த விஜயத்தை சீனா விமர்சித்துள்ளது.

ஆனால், இந்தப் பயணம் வெறுமனே ஆன்மீக உரைக்கான பயணம் மாத்திரமே என்று தலாய் லாமா கூறுகிறார்.

செய்தியரங்கம்

பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் பூர்த்தியாவதை ஜெர்மனி கொண்டாடியுள்ளது

ஜெர்மன் தலைவி அங்கேலா மெர்க்கெலுடன், முன்னாள் சோவியத் தலைவர் கோர்பசேவ் மற்றும் முன்னாள் போலந்து அதிபர் லெக் வலேசா

பெர்லின் சுவர் வீழ்ந்ததன் இருபது வருட நிறைவைக் குறிக்கும் வகையிலான வைபவத்தில் கலந்துகொண்ட ஜெர்மனிய ஆட்சித் தலைவரான அங்கேலா மெர்க்கல் அவர்கள், கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியை இணைக்கும் பாலம் ஒன்றின் மூலம் வைபவரீதியாக நடந்துவந்தார்.

இந்தப் பாலம்தான் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது முதன் முதலில் திறக்கப்பட்ட எல்லைக் கடவை மையம் ஆகும்.

முன்னாள் சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பசேவ், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராக முதல் முதலாக வெற்றிகரமாக சவால் விடுத்த போலந்து தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும், பின்னாளில் அதிபராக வந்தவருமான லெக் வலேஸா ஆகியோர் இந்த வைபவத்தில் மெர்க்கெலோடு நடந்து வந்தார்கள்.

ஜெர்மனியின் கிழக்குப் பகுதி போதிய பொருளாதார வளர்ச்சியைப் பெறாத நிலையில், ஜெர்மனியின் இணைவு இன்னமும் முழுமை பெறவில்லை என கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவரான மெர்க்கெல் கூறியுள்ளார்.


சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கூட்டாக நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்ற பிரச்சினையை சமாளிப்பதில் கூட்டாக செயல்படுவது என்பதற்கு இலங்கையும் ஆஸ்திரேலியாவும் உடன்பட்டுள்ளன.

கொழும்பு வந்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித்துக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை அகதிகள் அடங்கிய கப்பலொன்று ஆஸ்திரேலியா செல்லும் வழியில்இந்தோனேஷியாவில் கடந்த மாதம் வழிமறித்து தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் தீர்க்கப்படாத நிலையில் இந்த ஒப்பந்தம் வருகின்றது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு நோக்கி வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.


நீதிபதி தினகரனுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது

நீதிபதி பி.டி.தினகரன்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.டி.தினகரன், தமிழ்நாட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரில் அரசு நிலத்தை சட்டவிரோதாமாக கைப்பற்றியதாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருப்பதால் அவர் தமது பதவியில் நீடிக்கக்கூடாது என்று கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் சிலர், தினகரன் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிமன்றத்திற்குள் புகுந்து அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, அவரது பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தாம் விசாரித்துக்கொண்டிருந்த வழக்கை பாதியில் இடைநிறுத்திவிட்டு, நீதிபதி தினகரன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை படம்பிடித்துக்கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட சில ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் நீதிபதி தினகரன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தான் எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகள் கைது

திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் சென்னையை அடுத்த திருவள்ளூரில் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்று திருவள்ளூரில் நில மீட்புப் போராட்டம் நடத்த முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வரதராஜன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மனதில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஞாயிறன்றே அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

போராட்டம் குறித்து விவாதிக்கவென அழைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிலர் ஞாயிறு மாலையே கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்
பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியையும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவின் தேசியச் செயலர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

கடந்த 2002ல் திருநாவுக்கரசர் ஆரம்பித்திருந்த எம்.ஜி.ஆர்.-அண்ணா திமுக கட்சி பாரதீய ஜனதாவில் இணைந்திருந்தது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010