JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

செய்தியறிக்கை


ஒசாமா பின் லேடன்
ஒசாமா பின் லேடன்

ஆப்கானிஸ்தானில் அல்கைதாவினர் தற்போது செயற்படவில்லை - பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் தலைவர்

ஆப்கானிஸ்தானில் அல்கைதாவினர் தற்போது செயல்படவில்லை என்றும், அல்கைதாவினரின் நடமாட்டம் பாகிஸ்தானில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளது என்றும் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளின் தலைவர் சர் ஜாக் ஸ்டிர்ரப் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கை அல்கைதாவுக்கெதிரான பரவலான மோதலுக்கு உதவியாகவே இருக்கிறது என சர் ஜாக் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டணியின் படையினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கை முன்னேற்றம் காண வேண்டும் என்றாலோ வெற்றியடைய வேண்டும் என்றாலோ ஆப்கானிஸ்தான் தொடர்பான தனது வியூகம் என்ன என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பாப் எய்ன்ஸ்வொர்த் தெரிவித்திருந்தார்.


பாகிஸ்தான் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தான் தாக்குதல்
பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானில் வட மேற்கு பிராந்தியத்தில் பெஷாவர் நகருக்கு அருகில் மந்தைகள் விற்கும் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பழங்குடியின தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

உள்ளூரில் தாலிபன்களுக்கு எதிரான ஆயுதக்குழுவொன்றை உருவாக்கிய அப்துல் மாலிக் என்ற பழங்குடியின தலைவரை இலக்கு வைத்தே இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலை தாமே நடத்தியதாக தாலிபனும் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அண்மைய வாரங்களில் வரிசையாக நடைபெற்றுவந்துள்ள தாக்குதல் சம்பவங்களில் முந்நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


யேமனிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடங்களை சிலவற்றை மீட்டுள்ளோம் - சவுதி அரேபியா

சவுதி பாதுகாப்புப் படையினர்
சவுதி பாதுகாப்புப் படையினர்

சவுதி அரேபியாவில் யேமனுடனான எல்லைப் பகுதியில் சென்றவாரம் ஊடுருவியிருந்த யெமேனிய கிளர்ச்சிக்காரர்கள் அப்பகுதியில் கைப்பற்றிருந்த சில பகுதிகளை அவர்களிடம் இருந்து மீட்டெடுத்துவிட்டதாக சவுதி அரேபிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் இதை மறுத்துள்ளனர். வட யேமனிலுள்ள இலக்குகள் மீது சவுதி விமானங்கள் தொடர்ந்தும் குண்டுவீசிவருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

கிளர்ச்சிக்காரர்கள் ஊடுருவியபோது சவுதி அரேபிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து ஒரு வாரத்துக்கு முன்பு தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்ததாகவும், தங்களது நிலப்பரப்புக்குள்ளேயே தாக்குதல் நடத்தியதாகவும் சவுதியரேபியா கூறுகிறது.

சவுதி படையினர் சிலரை சிறைபிடித்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுவதையும் சவுதி அதிகாரிகள் மறுக்கின்றனர்.

ஆனால் சவுதி படையினர் மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும் நான்கு பேரைக் காணவில்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.


மீள் இணக்கப்பாட்டை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் - ஆஸ்திரேலிய அரசு

ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்

இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சமாதானத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அரசியல் சீர்திருத்தங்களையும் மீள் இணக்கப்பாட்டையும் முன்னெடுக்க அரசு முன்வரவேண்டுமென ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

திங்கட்கிழமை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்திற்கு முன்பதாக கருத்துதெரிவித்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், இலங்கையிலிருந்து ஆட்கள் கடத்தப்படுவதை கையாளும் வழிகள் குறித்தும் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் கடந்த மாதம் முதல் இந்தோனேசியாவுக்கு அருகில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை ஏற்றுக் கொள்ள ஆஸ்திரேலியா மறுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு

செய்தியரங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூஃப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூஃப் ஹக்கீம்

இலங்கை தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி

இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஈடுப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடைபெற்றதாகவும், இன்னும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறுபான்மை சமூகங்களின் சார்பில் குறைந்தபட்ச கொள்கை திட்டம் ஒன்றினை முன்வைத்து, அதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று சேர்ந்து செயற்படுவது சம்பந்தமான ஒரு முடிவை எட்டலாம் என்கிற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

தங்களால் வகுக்கப்படவுள்ள குறைந்தபட்ச செயற்திட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அவசர மீள்குடியேற்றம், நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு சம்பந்தமான விடயங்கள் போன்றவை இடம்பெறும் என்றும் ரவூஃப் ஹக்கீம் கூறுகிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சியையும் உள்ளடக்கியும் அந்த குறைந்தபட்ச கொள்கை திட்டம் உருவாகும் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் கூட்டணி சார்பில் யார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை செல்ல பல மாதங்களாக அனுமதி கிடைக்கவில்லை - ஐ.நா பிரதிநிதி

ஐ.நா
ஐ.நா

இலங்கைக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்க வில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி ப்ரான்க் லா ரூ கூறுகின்றார்.

இலங்கையில் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் நிலைமை குறித்து கண்டறியும் பொருட்டு விஜயமொன்றை மேற்கொள்ள தொடர்ந்து தான் முயற்சித்து வருதாக ப்ரான்க் லா ரூ தெரிவிக்கிறார்.

தமது வருகையை வரவேற்பதாக இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ள போதிலும் தமக்கான அதிகாரபூர்வ பதில் கடிதத்தை அவர்கள் அனுப்பி வைக்காதிருப்பது குறித்து ஆச்சரியமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


போருக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் துவக்கம்

திங்கட்கிழமை முதல் செயற்பாடுகள் ஆரம்பம்
திங்கட்கிழமை முதல் செயற்பாடுகள் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள யோகபுரம் மகாவித்தியாலயத்தில் திங்கட்கிழமை முதல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

ஞாயிற்றுக்கிழமை அந்தப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான மதிப்பீடு செய்த கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதேவேளை துணுக்காய் பிரதேசத்தில் திங்கட்கிழமை முதல் அஞ்சல் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா விஜயம்

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா
திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லமா, இந்தியா சீனா எல்லையிலுள்ள அருணாச்சல பிரதேசத்திலிருக்கும் புத்த மடத்திற்கான விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த மடத்தை சுற்றியுள்ள இடங்கள் சீனாவுக்கு சொந்தமானது என்று உரிமை கோருகின்ற சீன அரசு தலாய் லாமாவின் இந்த விஜயத்தால் கொதிப்படைந்துள்ளது.

இமயமலைத் தொடரில் உயரமானதோர் மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்குப்புறமான புத்த மடம், இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 1962ல் சிறிது காலம் நடந்த யுத்தத்தின் ஒரு காரணமாகவும் இந்த எல்லைத் தகராறு அமைந்திருந்தது.

சீனாவின் நில ஒருமைப்பாட்டை குலைப்பதற்கான ஒரு முயற்சி இது என்று சீன அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. தலாய் லாமாவின் இந்தப் பயணம் இந்தியா சீனா இடையிலான உறவுகள் சேதப்பட காரணமாக அமையும் என்று கூறுகிறது.

ஆனால் தனது ஆன்மிக விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக உரையாற்றுவதற்காகவே தான் இங்கு சென்றிருப்பதாக தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். தனது பயணத்திற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்ற சீனாவின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

அருணாச்சல பிரதேசத்தில் அண்மையில் நடந்த தேர்தலுடைய பிரச்சார காலத்தில் இந்தியப் பிரதமர் அங்கே சென்றிருந்தபோதும் சீனா ஆட்சேபனை தெரிவித்திருந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.


ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

டக் போல்லிங்கார்
டக் போல்லிங்கர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஞாயிற்றுகிழமை குவஹாத்தில் நடைபெற்ற ஆறாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதன் மூலம் 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 4 – 2 என்ற நிலையில் முன்ணணியில் இருக்கிறது, தொடரையும் வென்றுள்ளது.

7வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நவம்பர் 11 ஆம் தேதி அன்று மும்பையில் நடைபெறவுள்ளது.


.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010