செய்தியறிக்கை
| |
ரஷ்ய அதிபர் மெட்வடேவ் |
ரஷ்ய பொருளாதாரம் குறித்த விமர்சனத்தை அதிபர் மெட்வடேவ் புறந்தள்ளினார்
ரஷ்ய பொருளாதாரம் மிகவும் அடிப்படையான நிலையிலேயே இருக்கிறது என்றும், அதை நவீனப்படுத்தினால் மட்டுமே அங்கு பொருளாதாரம் தழைத்தோங்கும் என்றும் கூறப்படுவதை அந்நாட்டின் அதிபர் டிமெட்ரி மெட்வடேவ் புறந்தள்ளியுள்ளார்.
தமது நாட்டு பொருளாதாரம் கச்சாப் பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பது வேதனையளிக்கக் கூடிய விடயம் என்றும் அது அனைத்து ரஷ்யர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உயர் தொழில்நுட்பம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் மெட்வடேவ் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
இதைச் சாதிக்க வேண்டுமானால் மேலும் சுதந்திரமான மற்றும் மேம்பட்ட ஜனநாயக சமூக அமைப்பு அங்கு தேவை என்றும் அவர் கூறுகிறார்.
எனினும் மெட்வடேவ் அவர்கள் தனக்கு முன்னர் அதிபராக இருந்த விளாடிமிர் புடின் அவர்களின் நிழலிலேயே இன்னமும் வாழ்வதாக மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புடின் அவர்கள் தற்போது ரஷ்யாவின் பிரதமராக இருக்கும் நிலையில், தனது வார்த்தைகளை செயலாக்கும் விதமாக உண்மையான சீர்திருத்தங்களை முன்னெடுக்க மெட்வடேவ் அவர்களால் முடியுமா என்று ஆய்வாளர்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
எஸ்காமின் அதிகாரப் போட்டி முடிவுக்கு வந்தது
தென் ஆப்பிரிக்காவின் மின்சார நிறுவனமான எஸ்காமில் நிலவி வந்த இனரீதியான புகார்களுடன் கூடிய அதிகாரப் போட்டி, அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜேகப் மரோகா பதவி விலகியதால் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிறுவனத்தின் தலைவரான வெள்ளையினத்தைச் சேர்ந்த பாபி காட்செல் சென்ற வாரம் மரோகா இராஜினாமா செய்ததாக அறிவித்ததை அடுத்து பிரச்சனை எழுந்தது.
இனரீதியான குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதையடுத்து காட்செல் அவர்கள் இந்த நிறுவனத்தை விட்டு விலகினார். ஆனால் மராகா அவர்கள் பணியில் நீடித்தார். தற்போது அவரும் பதவி விலகியுள்ளார்.
பெரிய அளவு இழப்புக்களை சந்தித்து வரும் இந்த நிறுவனம், சீராக மின் விநியோகம் செய்ய முடியாமல் தடுமாறுவதாகக் கூறும் பிபிசியின் ஜொஹான்ஸ்பர்க் நிருபர் இந்த சர்ச்சை இந்த நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாக கூறினார்.
சீனாவின் சட்ட விரோத சிறைகள் மூடப்பட வேண்டும் என்று கோரிக்கை
| |
முன்னாள் சிறைக் கைதி ஒருவர் பொலிஸ்காரர்களுடன் பேசுவதற்காக காத்துக்கிடக்கிறார் |
இந்தச் சிறைச்சாலைகளில் அடிக்கடி மக்கள் அடைக்கப்பட்டு உடல் மற்றும் உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளூர் குறைகள் குறித்து தலைநகர் பீஜிங் மற்றும் பல நகரங்களில் உள்ள அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தவர்களே இவ்வாறு அரசின் உளவாளிகளால் கைது செய்யப்பட்டு, இந்தச் சட்டவிரோத சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
சீனாவின் ஒரு பகுதியிலிருந்து பெருமளவில் மனுக்கள் வருமாயின் அந்தப் பகுதியில் இருக்கும் உள்ளூர் அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கப்படும் நிலையில், இப்படியான வகையில் செயற்படுவதன் மூலம், அந்த அதிகாரிகள் தண்டனைகளில் இருந்து தப்பிக்கிறார்கள் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் இப்படியான சட்ட விரோத சிறைச்சாலைகள் செயற்படுவதை சீன அரசு மறுத்து வருகிறது.
பாலத்தீன தேர்தல்களை தள்ளிவைக்கப் பரிந்துரை
| |
மேற்குக்கரையில் அப்பாஸின் சுவரொட்டிகள் |
காசா நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம் அங்கு தேர்தல் நடைபெறுவதற்கு அனுமதிக்காது என்கிற காரணத்தினால், ஜனவரி மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த தேர்தலை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது என்று தேர்தல்களுக்கு பொறுப்பான அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்கு நடைபெறவுள்ள தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதில் இருக்கும் முட்டுக்கட்டையை காரணம் காட்டியே அவர் தேர்தலில் போட்டியிடடுவதில்லை என்று அறிவித்ததிருந்தார்.
ஆனாலும் அங்கு தேர்தல் நடைபெறாவிட்டால் அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
| |
ஜெனரல் சரத் பொன்சேகா |
ஜெனரல் சரத் பொன்சேகா இராஜினாமா
இலங்கையின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தான் வழங்கிவிட்டதாக அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
இந்த மாத இறுதியுடன் தான் பதவி விலகப்போவதாக தெரிவித்த பொன்சேகா அவர்கள், தனது இராஜினாமாவுக்கான பல காரணங்களை, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், தற்போதைக்கு அவற்றை வெளியிட முடியாது என்றும் கூறினார்.
இந்த வருட முற்பகுதியில் முடிவுக்கு வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை இராணுவத்துக்கு தலைமை தாங்கியவர் இவராவார்.
| |
சக படையதிகாரிகளுடன் சரத் பொன்சேகா(ஆவணப்படம்) |
சில மாதங்களுக்கு முன்னர் இராணுவ தளபதியாக இருந்து வெறுமனே அலங்கார பதவியாக மாத்திரம் கருதப்படும் தற்போதைய பதவிக்கு அவர் பதவி உயர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.
| |
அடுத்த வருடம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
'இறுதிக்கட்டத்தில் துணுக்காய் மீள்குடியேற்றம்'- முல்லை அரச அதிபர்
| |
ஆஸ்திரேலியாவின் விசேட தூதுவரை வரவேற்கும் அதிகாரிகள் |
இது வரையில் இந்தப் பகுதியில் 6000 பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.
அதேவேளை, துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் போக்குவரத்து, விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரிசிறி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் துணுக்காய் பிரதேசத்தின் விவசாய அபிவிருத்திக்கென 14 மில்லியன் ரூபாவும், இந்தப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 19 பாடசாலைகளைப் புனரமைத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக 39 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுனர் சந்திரசிறி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கிடையில் இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலிய விசேட தூதுவர் ஜோன் மெக்கார்த்தி அவர்கள் நேற்று துணுக்காய் பிரதேசத்திற்குச் சென்று அங்கு இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளி்ன் தளபதி மேஜர் ஜெனரல் அத்துல ஜயவர்தன ஆகியோரை ஆஸ்திரேலியாவின் விசேட தூதுவர் சந்தித்து, அங்கு இடம்பெற்று வருகின்ற அபிவிருத்தி பணிகள் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் என்பன குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.
இலங்கை அகதி முகாம்களுக்கு தமிழக அரசு 100 கோடி ஒதுக்கவுள்ளதாக அறிவிப்பு
| |
தமிழகத்தில் இலங்கை அகதிகள் |
கடந்த சில வாரங்களாகவே முதல்வர் கருணாநிதி அகதி முகாம்களின் நிலைமையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது அமைச்சர்களை முகாம்களைப் பார்வையிட்டு வருமாறு பணித்திருந்தார். அவ்வமைச்சர்களின் அறிக்கைகளை விவாதிப்பதற்காகவே இன்று அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டியிருந்தார்.
பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முகாம்களிலுள்ள 5922 குடியிருப்புக்களை செப்பனிடவும், சாலை, கழிப்பிடம், குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, முகாம்வாசிகள் அனைவருக்கும் தமிழகத்திலுள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படுவதுபோல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக