செய்தியறிக்கை
| |
முக்கிய சந்தேக நபர் காலித் ஷேக் முகம்மத் |
அமெரிக்க தாக்குதல் சந்தேகநபர்கள் நியூயார்க் கொண்டு செல்லப்படுகின்றனர்
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலை திட்டமிட்டவர் என்று குற்றஞ்சாட்டப்படுபவர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள், சிவிலியன்களுக்கான நீதி விசாரணைகளை எதிர்கொள்வதற்காக நியூயோர்க்குக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.
முக்கிய சந்தேக நபரான காலித் ஷேக் முஹமதும் மற்றைய நால்வரும், நீதியின்பால் செய்ய வேண்டிய கடுமையான விசாரணைகளை எதிர்கொள்வார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தற்போது குவாண்டனாமோ குடாவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த நால்வரும் இராணுவ நீதிமன்ற விசாரணையையே எதிர்கொள்வார்கள் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இவர்களை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் இந்த நடவடிக்கையானது, கியூபாவில் உள்ள தடுப்பு முகாம்களை மூடுவதற்கான அதிபர் ஒமாவின் திட்டத்தின் முதற்படியாகும். ஆனால், செப்டம்பர் 11 தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் சில குடும்பங்கள் இந்த விசாரணைகள் நியூயோர்க்கில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆப்கன் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பட்டியல் இருப்பதாக வழக்கறிஞர் தகவல்
ஆப்கானிஸ்தானில், அரசாங்க ஒப்பந்தங்களை கொடுப்பதில் லஞ்சம் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டட மூத்த அதிகாரிகளின் பட்டியல் ஒன்று தன்னிடம் இருப்பதாக அந்நாட்டின் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி இஸ்ஹாக் அலுகோ கூறுகிறார்.
| |
ஆப்கான் அரசில் ஊழல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது |
இவர்களை விசாரிப்பதற்காகவென விசேட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாட்டின் அதிபரிடமும் உச்சநீதிமன்றத்திடமும் தான் கோரியுள்ளதாக அலூகோ பிபிசியிடம் தெரிவித்தார்.
யார் யார் சந்தேகிக்கப்படுகின்றனர் என்றோ எத்தனை பேரின் பெயர் பட்டியலில் உள்ளது என்றோ தெரிவிக்க அவர் மறுத்துள்ளார். அமைக்கப்படக்கூடிய புதிய நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கும்வரை விபரம் வெளியிட முடியாது என்று அவர் கூறினார்.
அதிபர் ஹமீத் கர்சாய் மீண்டும் அதிபராக வந்துள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்துவருகிறது.
தாலிபன்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஏனைய நேட்டோ நாடுகளும் பங்காற்ற வேண்டும்—கார்டன் பிரவுன்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் பளுவை பகிர்ந்துகொள்ள வருமாறு ஏனைய நேட்டோ நாடுகளை பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண் மீண்டும் கேட்டுள்ளார்.
பிபிசி செவ்வி ஒன்றில் பேசிய பிரிட்டிஷ் பிரதமர், ஆப்கானுக்கு மேலதிக துருப்புகளை அனுப்ப தாம் தயார் என்றும், ஏனைய நாடுகளும் தமது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான ஆதரவை அதிகரிக்கச் செய்வதற்காக ஐரோப்பா எங்கிலும், தூதர்களை அனுப்பவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
| |
ஆப்கானில் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் |
ஆப்கானிய பாதுகாப்புப்படையினருக்கான மேலதிக பயிற்சி மற்றும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தல் ஆகியவற்றுக்கான யுக்திகளுடன், மேலும் 5000 துருப்புக்கள் உதவிக்கு கிடைப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் ஆப்கான் படையினர் இந்த சண்டைகளை தம் வசம் எடுத்துக்கொள்ளவும் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தலிபான்களுடன் சமரசப்பேச்சுவார்த்தைகளை நடத்துவது அமைதிக்கான யுக்தியாக அமையாது என்றும், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை அது முடிவுக்கு கொண்டுவராது என்றும், சில தலிபான் படைகளாவது வெல்லப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒபாமாவின் ஆசிய பயணம் துவங்கியது
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆசியாவுக்கான தனது பயணத்தைத் துவங்கியுள்ளார். ஆசிய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளை வலுப்படுத்துவது தனது இப்பயணத்தின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
டோக்கியோவில் ஜப்பானிய தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் கருத்து வெளியிட்ட அதிபர் ஒபாமா, அமெரிக்கா இன்றளவும் ஆசிய பசிபிக் வட்டகையின் வல்லரசாக நீடிக்கிறது என்று வலியுறுத்தினார்.
| |
ஜப்பானில் பயணிக்கும் ஒபாமா |
இவ்வட்டகையில் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு ஜப்பானுடனான அமெரிக்காவின் நல்லுறவு அடிப்படையான விடயம் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.
ஆனாலும் புதிய நூற்றாண்டின் சவால்களுக்கு முகம்கொடுக்கும் விதமாக இந்த உறவை இருநாடுகளும் புதுப்பிக்க வேண்டும் என்று ஒபாமா தெரிவித்துளார்.
ஜப்பானின் ஒகினாவா தீவில் அமெரிக்க இராணுவ தளம் அமைந்துள்ள பிரச்சினையை முன்வைத்து தான் தேர்தல் வெற்றி பெற்றதை ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹடயாமா நினைவுகூர்ந்ததுடன், உறவில் சிக்கல்கள் தோன்றாமல் இருக்க இந்த விவகாரம் வேகமாக தீர்க்கப்படுவது அவசியம் என்று அவர் கூறினார்.
| |
ஜெனரல் சரத் பொன்சேகா |
ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகலை இலங்கை அரசு ஏற்றது
இலங்கை கூட்டுப்படைத் தளபதி பதவியில் இருந்து இம்மாத முடிவில் விலகுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் வழங்கிய கடிதத்தை அரசு ஏற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
பொன்சேகா அவர்கள் உடனடியாக பணியில் இருந்து விலகிச் செல்லலாம் என்று அரசின் அதிகார பூர்வ இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றார். மேலும் தான் இம்மாத இறுதியில்தான் பதவி விலகச் செல்ல விரும்புவதாகவும் அதற்கு முன்பாகவே தான் பதவியில் இருந்து அனுப்பபட்டால் அது கட்டாய ஒய்வாகவே இருக்கும் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதே வேளை தான் பதவி விலகுவதற்கான 16 காரணங்களை ஜனாதிபதியிடம் பதவி விலகல் கடிதத்துடன் ஜெனரல் பொன்சேகா அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த கடிதம் குறித்து அதிகார பூர்வமாக கருத்து தெரிவிக்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துவிட்டார்.
ஜெனரல் பொன்செகாவின் பதவி விலகல் குறித்து இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்கவல்ல அவர்கள் அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார்
இந்திய நிதியமைச்சரான பிரணாப் முஹர்ஜி அவர்கள் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
| |
இந்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி |
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ள அவர், இலங்கையில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களைத் தரக்கூடிய அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களை தேசிய நீரோட்ட அரசிலுக்குள் இணைப்பதற்கான முயற்சிகள், அவர்களுக்கான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள், இந்தியாவின் நிதியுதவிகளை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்திய குழுக்களுக்கு உதவும் முகமாக மேலதிகமாக அங்கு பணியாளர்களை உதவிக்கு அனுப்புவது குறித்தும் அவர் இலங்கையில் கலந்துரையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்னம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலனாய்வு பிரிவு பொலிசாரினால் வெள்ளிக்கிழமையன்று முதற்தடவையாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இவர் மீதான விசாரணைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதவான் இவரை வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் வன்னிப் பிரதேசத்தில் சண்டைகள் தீவிரமடைந்தது முதல் கனகரட்ணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தைப் படையினர் கைப்பற்றிய போது, பொதுமக்களோடு, இவரும் தனது குடும்பத்தினருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் படையினர் இவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார்கள்.
கடந்த ஆறுமாத காலமாக விசாரணை செய்ததன் பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கும் தென்பகுதி பிரதேசங்களுக்கும் இடையிலான பொதுமக்கள் போக்குவரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதனையடுத்து, யாழ் குடாநாட்டிற்கு மக்கள் சிரமங்களின்றி ஏ9 வீதி வழியாகப் போய்வரலாம் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டதையடுத்து, வவுனியாவில் இருந்து 8 பஸ் வண்டிகளில் பயணிகள் யாழ்ப்பாணத்திற்குப் பயணமாகியதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ் முகாமையாளர் கணபதிப்பிள்ளை கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக