JKR. Blogger இயக்குவது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


இரானின் அணுவசதிகள்
இரானின் அணுவசதிகள்

இரானுக்கு மேற்கத்தைய நாடுகள் கண்டனம்

இரானிய அரசு யூரேனியம் செறிவூட்டலை மிக உயர்ந்த தரத்திற்கு மேற்கொள்ளவிருப்பதாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் குறித்து மேற்கத்தைய நாடுகள் மிகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இதற்கு அடுத்த கட்டம் இரான் அணு ஆயுதம் தயாரிப்பது தான் என்று மேற்குலக அரசுகள் கருதுகின்றன. இரானின் நடவடிக்கையை பிரிட்டனும் ஜெர்மனியும் கண்டனம் செய்துள்ளன.

இரான் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் மீது ஏற்றுமதி தடைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக நாடுகள் இனி முயல வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க உதவியுடன் நடத்தப்படும் பாரசீக மொழி வானொலியுடன் தொடர்புடையவர்கள் என்றும், அமெரிக்காவுக்கு ஒற்றர்களாக வேவு பார்த்தவர்கள் என்றும் இரானியர்கள் சிலரை இரான் அரசு கைது செய்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் படைக்கு கட்டாய ஆள் சேர்ப்பு யோசனை - அதிபர்

ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்
ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை ஆப்கான் படைகளே பொறுப்பேற்க்கக்கூடிய முறையில் ராணுவ சேவைக்கு கட்டாய ஆட் சேர்ப்பதன் மூலம் படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி தாம் ஆலோசித்து வருவதாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் உலக பாதுகாப்பு அதிகாரிகள் மாநாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த அமெரிக்காவின் தலைமையிலான படைகள் ஆயத்தம் செய்து வரும் வேளையில் கர்சாய் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தென்பகுதியில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் கிளர்ச்சியாளர்களுடனான போர் ஆரம்பித்த பின்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே, தற்போது நடத்தப்படவுள்ள தாக்குதல் தான் மிகப்பெரியதாக இருக்கும் என்று நேட்டோ தளபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.


இராக்கில் ஷியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஷியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஷியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இராக்கில் தடை செய்யப்பட்ட பாத் கட்சியுடன் தொடர்புடையதாக கருதப்படும் வேட்பாளர்களை தேர்தலில் இருந்து ஒதுக்கி வைக்கும் தடை நீக்கப்பட்டதை கண்டித்து இராக்கின் ஷியா முஸ்லிம் பிரிவு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இந்த பிரச்சனைக்கான தீர்வை காணாவிட்டால், தேர்தல் பிரச்சாரம் மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.


'பிரையஸ்' கார்களை டோயோட்டா திரும்ப பெறலாம்

'பிரையஸ்'
'பிரையஸ்'

ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தயாரித்து வரும் அதன் நட்சத்திர தயாரிப்பான ‘பிரையஸ்’ காரில் பிரேக் சாதனத்தில் தவறு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரையஸ் கார்கள் மீளப் பெறப்படுவது பற்றிய அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படும் என்று ஜப்பானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 நாடுகளில் சுமார் 3 லட்சம் டோயோட்டா ‘பிரையஸ்’ கார்கள் விற்கப்பட்டுள்ளன. டோயோட்டா நிறுவனம் இது பற்றி ஏற்கனவே ஜப்பானில் உள்ள கார் விற்பனையாளர்களுக்கு அறிவித்திருப்பதாகவும், ஜப்பான் அரசாங்கத்துடன் பேசிவிட்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை டோயோட்டா நிறுவனம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியரங்கம்
இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டாலர் இராணுவக் கடனுதவி

இலங்கை ஜனாதிபதியாக இரண்டாவது முறை தேர்தெடுக்கப்பட்ட பிறகு தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள், இந்த பயணத்தின் போது 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் நடைபெற்ற போர் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் பின்புலத்தில் போருக்கு பின்னர் இந்த இராணுவ உடன்பாட்டின் நோக்கம் என்ன என்று இலங்கையிலிருக்கும் இராணுவப் பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார்.

அதில் தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது 300 மில்லியன் டாலர்கள் கடனுக்கான உடன்பாடுதான் என்றும் அந்தக் கடனுதவி ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள், அதாவது புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், மேம்படுத்தும் வகையிலேயே வழங்கப்படவுள்ளது என்றும் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


ஆவணங்களை காண்பித்து வாகனங்களை மக்கள் திரும்ப பெறலாம் - யாழ் ஆயர்

யாழ் ஆயர் தாமஸ் செளந்திரநாயகம்
யாழ் ஆயர் தாமஸ் செளந்திரநாயகம்

இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அந்தப் பகுதிகளுக்கு போருக்கு பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இராணுவத்தின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் கூறினார்.

இந்த வாகனங்கள் தற்போது அந்தப் பகுதி அரசாங்க அதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியும் என இராணுவத்தினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, முதற் தடவையாக அவர் யுத்தம் நடைபெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தமிழகத்தில் 'கேரம்'

சென்னை
சென்னை

கேரம் விளையாட்டில் இந்தியா உலக சாம்பியனாக இருக்கும் நிலையில் தமிழகம் இந்த விளையாட்டில் முன்ணணியில் உள்ளது. சென்னையில் குடிசைப்புறங்கள் மற்றும் ஏழ்மையான இடங்களில் மிக அதிக அளவில் கேரம் விளையாடப்படுகிறது.

இந்த விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடங்களை பெற்றுள்ளனர். இந்த விளையாட்டு தமிழகத்தில் பிரபலமாக இருப்பதன் காரணம், இதை விளையாடுபவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்கிறார் நமது தமிழகச் செய்தியாளர் டி.என். கோபாலன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010