JKR. Blogger இயக்குவது.

சனி, 6 பிப்ரவரி, 2010

எதிரணியை அடக்கவே அவசரகாலச் சட்டம் : லக்ஷ்மன் செனவிரத்ன


வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அவசர காலச் சட்டம் தேவையெனில் ஏன் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்? வடபகுதியில் மட்டும் அதை அமுல்படுத்தலாமே?" என ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன கேள்வி எழுப்பினார்.

அவசர காலச் சட்டத்தை அரசாங்கம் எதிரணிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகிறது. எனவே ஐ.தே.கட்சி இதனை எதிர்க்கின்றதென்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. ஏ9 பாதை திறக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலும் முடிந்து விட்டது. பாதுகாப்பு செயலாளர் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று உறுதியுடன் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன், எதற்கு அவசர காலச் சட்டம் தேவைப்படுகிறது? ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் லங்கா பத்திரிகை தடை செய்யப்பட்டது.

எதிரணி ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவையெல்லாம் அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. பொதுத் தேர்தலில் எமது ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கவே அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். உண்மையை எழுத முடியாது தடுக்கப்படுகிறது. அரசாங்கத்தைச் சார்ந்தோர் பகிரங்கமாக எமது ஆதரவாளர்களை தாக்குகின்றனர். துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறானவர்களை ஏன் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்ய முடியாது?

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத் தரப்பில் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவசர காலச் சட்டம் தேவையென பிரதமர் சொல்கிறார்.

அப்படியானால் வடபகுதிக்கு மட்டும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தலாமே? ஏன் நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்?

நாட்டில் சட்டம் செத்துவிட்டது. ஐ.தே.கட்சியை சார்ந்த பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதுள்ளது. தேர்தல் வெற்றியால் மஹியங்கனை நகரில் எதிர்க் கட்சியினர் மீது அடக்கு முறை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனவே ஐ.தே.கட்சி அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவினை வழங்காது. பொலிசாருக்கு தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. ஹெல உறுமய பௌத்த குருமார் இன்றைய வன்முறைகள் தொடர்பாக என்ன சொல்கின்றனர்?

ஏன் தர்மத்திற்கு மாறுபட்ட வன்முறைகளுக்கு இடமளிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010