JKR. Blogger இயக்குவது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்


சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று மாலை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:-

நேற்று முற்பகல் 11 மணியளவில் வவுனியாவிலிருந்து "சுடர் ஒளி" கொழும்பு அலுவலகத்துடன தொடர்புகொண்ட சிவநாதன் கிஷோர், ஆசிரியர் வித்தியாதரனை விசாரித்துள்ளார். அச்சமயம் அவர் ஆசிரிய பீடத்தில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், தமக்கு எதிராக உங்கள் பத்திரிகைகளில் விமர்சனச் செய்திகள் பிரசுரிக்கக்கூடாது என்ற தொனியில் ஆசிரிய பீட உறுப்பினருக்கு அவர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

தாம் எதையும் பகிரங்கமாகவே செய்பவர் என்றும், மற்றவர்களைப் போல எதையும் ஒளித்துக்கொண்டு போய் அரசுடன் சேர்ந்து செய்பவரல்லர் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்மைப் பற்றிச் செய்தி வெளியிடுவதை நிறுத்தும்படியும் இறுக்கமான தொனியில் அவர் கூறினார்.

பத்திரிகை நிறுவனத்தில் இருந்த ஆசிரிய பீட பணியாளர் , எந்த விடயம் என்றாலும் அலுவலகத்துக்கு ஆசிரியர் வந்த பின்னர் அவரிடம் கூறும்படி கிஷோருக்குத் தெரிவித்தார்.

மீண்டும் மாலை 5.15 மணியளவில் கிஷோர் எம்.பி. தொடர்பு கொண்டார். அவரது கோரிக்கையின்படி ஆசிரியர் வித்தியாதரனுக்கு அவரது இணைப்பு கொடுக்கப்பட்டது.

தம்மைப்பற்றிய செய்திகள் தருபவர் யார், தன்னைப்பற்றி செய்திகளை தனது முன் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற கடுந்தொனிப் பீடிகையுடன் கிஷோர் எம்.பி., வித்தியாதரனுடன் உரையாடலை ஆரம்பித்தார்.

உரையாடலின் போது, பகிரங்கப் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் செயற்படுவோர் பற்றிய செய்திகள், தகவல்கள் வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறுவது அவசியமல்ல. அதைத் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை. உரிமையுமில்லை. செய்திகள் தவறாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யுங்கள் என்று பதிலளித்தார் ஆசிரியர் வித்தியாதரன்.

அதற்கு கிஷோர் எம்.பி்., வித்தியாதரனிடம், உன்னைக் கொலை செய்யச் செய்திருக்க வேண்டும். கொல்லுவதற்கு ........"என்று அவர் மிரட்டும் தொனியில் பேச்சைத் தொடர்ந்ததும், "தொலைபேசி உரையாடல் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றது. உங்களுக்கு விரும்பிய மிரட்டலை எல்லாம் கூறுங்கள்" என்றார் ஆசிரியர்.

அவ்வளவுதான். தொலைபேசி இணைப்பு உடனே சட் என்று துண்டிக்கப்பட்டது.

இந்த மிரட்டல் குறித்து உரிய தரப்புகளிடம் முறைப்பாடு செய்ய பத்திரிகை நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010