JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை காண முடியும்-புளொட் சித்தார்த்தன்!


முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில். தமிழ் மக்களை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கு வாக்களித்தார்கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கோ அல்லது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கோ வாக்களித்திருக்கிறார்கள். இந்த இருவரும் தமிழ் தேசியத்தை முற்று முழுதாக நிராகரிப்பவர்கள்.

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அரசின் மீதுள்ள தமது விருப்பு வெறுப்பை காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தார்கள். தேர்தல் அறிவித்ததும் ஒரு பகுதியினர் ஆதரிப்பதற்கும் பெரும்பகுதியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பதற்குமான விருப்பை கொண்டிருந்தார்கள் என்பதனை காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலானவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிந்திருந்தும் எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்று முடிவெடுப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக அனைத்து கட்சிகளும், சர்வதேசமும் குறுகிய காலத்தில் இது நடைபெறாது என எதிர்ப்புக் குரல்கள் வெளிக்கொணர்ந்த வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களுக்குள் மீள் குடியேற்ற வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று எங்களுக்கு மாத்திரமல்ல இந்திய அரசுக்கும் உறுதியளித்திருந்தார்.

விடுதலைப் புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற சிறார்களை விடுதலை செய்ய வேண்டுமென நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அவர்களது பாதுகாப்பு சோதனைகள் முடிந்தவுடன் பகுதி பகுதியாக விடுதலை செய்யப்படுவர் என எமக்கு உறுதியளித்தார்.

இந்த இரு விடயங்களையும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே செயற்படுத்த ஆரம்பித்தார். இந்த பிரச்சினைகள் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் முக்கியமானதொன்று என நாம் கருதுகிறோம்.

இப்போது செயற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள் ஜனாதிபதித் தேர்தலில் மாறுதல்களையும், கால தாமதத்தையும் அல்லது தடைப்படும் என்று எதிர்பார்க்கின்றபோது அவ்வாறு நடந்து விடாமல் அந்தந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை நாம் எதிர்பார்த்தே ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

ஆகவே பதவியில் இருக்கும் ஜனாதிபதி தமிழ் மக்கள் முகங்கொடுக்கின்ற உடனடி பிரச்சினைகள் (மீள் குடியேற்றம்) அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் அவருடன் பேசி தீர்வினை காணலாம் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.

யார் விரும்புகின்றார்களோ இல்லையோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த ஏழு வருடங்களுக்கு ஜனாதிபதி என்பதே யதார்த்தம்.

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் ஒரு தீர்வை காண முடியும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010