JKR. Blogger இயக்குவது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு


வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார்.

தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யெமெனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

2008 / 2009 ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார்.

ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சவரம்பை உயர்த்துதல்

பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது. ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து முக்கியமாக வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன:

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ஈ (G C S E) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள்.

* 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010