JKR. Blogger இயக்குவது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு


பாராளுமன்றம் கலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடு பிடித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்று வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளன.

இதேவேளை கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாக்கிரக எதிர்ப்புக் கூட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ஆளும் கட்சி

அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு தமது முன்னணியூடாக களமிறங்கும் வேட்பாளர்களைத் தெரிவதற்கென ஒரு குழுவும் அதே நேரம் வேட்பாளர் தெரிவில் சிக்கல் நிலை தோன்றும் பட்சத்தில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரைக் கொண்ட வேட்பாளர் தெரிவு அதிகாரிகள் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் மூன்றாக பிரித்து அதனடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று கூடுகிறது

இதன்படி கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றும் நாளையும் கூடுகின்ற மேற்படி தெரிவுக் குழுவினூடாக ஆளும் கட்சி சார்பிலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பிரதமர் தலைமையில்

இதேவேளை பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தலைமையில் பஷில் ராஜபக்ஷ எம்.பி. அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் டளஸ் அழகப் பெரும ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவிடம் வேட்பாளர் தெரிவு தொடர்பில் குளறுபடிகள் அல்லது பக்கச்சார்பு இடம்பெற்றிருப்பின் முறையிட்டு அக்குழுவினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வேட்பாளர் தெரிவு நடவடிக்கைகளை நாளை மறுதினம் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.

கட்சியின் நாடு முழுவதிலுமுள்ள தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்களையும் அதன் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு அழைத்திருக்கின்ற கட்சியின் உயர் மட்டம் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய கலந்துரையாடலுக்கு அனைத்து அமைப்பாளர்களும் இதில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் ஒதுக்கப்பட வேண்டியிருப்பதால் அது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது 16 அரசியல் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற அதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவை யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிலும் சில சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

ஜே.வி.பி. மந்திராலோசனை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பில் மந்திராலோசனைகள் இடம்பெற்று வருவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது இணைந்திருந்த எதிர்க் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பிலும் அதே நேரம் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பிலும் இங்கு கட்சிகளிடையே சிறிதளவான முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் எனினும் இந்த முரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு எட்டப்படும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தெரிய வருகின்றது.

தே.சு.மு. 19;ஹெல உறுமய 5

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் தமது வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பில் தீர்மானித்துள்ளன.

இதன்படி தேசிய சுதந்திர முன்னணி வடக்கைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ள அதேவேளை தமது கட்சியின் சார்பில் 19 பேரை வெற்றிலைச் சின்னத்தில் களமிறக்குவதாகவும் அது தொடர்பிலான பெயர்ப் பட்டியலை ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

அதே போல் ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் தமது கட்சி கொழும்பு உட்பட 5 மாவட்டங்களில் மாத்திரமே 5 வேட்பாளர்களை களமிறக்குவதாகவும் ஏனைய பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான நிதி வசதிகள் இல்லையென்றும் அக்கட்சியின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்கவில்லை

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து மலையக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே அது குறித்து சிந்திக்க வேண்டியிருப்பதாகவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சந்திரசேகரனை தேர்தலில் போட்டியிட வைப்பதா என்பது தொடர்பிலும் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. வெற்றிலையில்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடு முழுவதிலும் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஐ.ம.மு.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்பதால் அது யானைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் சகல பிரதேசங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் களமிறங்குவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010