JKR. Blogger இயக்குவது.

புதன், 3 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


விபத்துக்குள்ளான கன்கார்டு விமானம்
விபத்துக்குள்ளான கன்கார்டு விமானம்

ஒலியை விட வேகமாக செல்லும் கான்கார்ட் விமான விபத்து குறித்த விசாரணை

பாரிசுக்கு வெளியே, 10 ஆண்டுகளுக்கு முன்னர் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட, கன்கார்ட் அதிவேக விமான விபத்து குறித்த விசாரணை பிரான்சில் தொடங்கியுள்ளது.

அமெரிக்க விமான நிறுவனமான , காண்டினண்டல் , மற்றும் ஐந்து தனிநபர்கள், ஆட்கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்.

இந்த கன்கார்ட் விமானம், பறப்பதற்கு முன்னர் ஓடுபாதையில் செல்லும்போது, காண்டினண்டல் நிறுவனத்தின் விமானம் ஒன்றிலிருந்து விழுந்த உலோகத்துண்டு ஒன்றின் மீது மோதியது என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறியது.

காண்டினண்டல் நிறுவனத்தின் வழக்குரைஞர்கள், இந்த கன்கார்ட் விமானம், இந்த உலோகத்துண்டின் மீது மோதுவதற்கு முன்னதாகவே தீப்பிடித்துவிட்டது என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தாங்கள் ஏதும் தவறு செய்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார்கள்.


அமெரிக்க ஏவுகணை திட்டத்திற்கு இரான் கண்டனம்

இரானிய ஏவுகணை
இரானிய ஏவுகணை

ஏவுகணை தாக்குதலுக்கு எதிரான புதிய தற்காப்பு கட்டமைப்பு ஒன்றை வளைகுடா பிராந்தியத்தில் நிறுவுவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு இரான் கடுமையாக எதிர்பு தெரிவித்திருக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரான் எதிர்ப்பு நிலையை உருவாக்க அமெரிக்கா முயல்வதாக இரானின் வெளியுறவுத் துறையின் பேச்சாளர் குற்றம் சாட்டினார்.

இரான் தனது அண்டை நாடுகளுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் உருவாக்கவில்லை என்று இரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாடிஜானி அவர்கள் தெரிவித்தார்.

இரான் அல்லது வடகொரியா தயாரிக்கக்கூடும் என்று கருதப்படும் தொலைதூரம் சென்று தாக்கவல்ல ஏவுக ணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கவல்ல ராக்கெட்டுகளை அமெரிக்கா நேற்று திங்கட்கிழமை பரிசோதித்தது.


பூகம்பத்துக்குப் பிறகு ஹெய்த்தியில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேற்றம் - ஐ.நா.

பூகம்பத்தில் பிழைத்தவர்களின் நிலை மோசமாக உள்ளது
பூகம்பத்தில் பிழைத்தவர்களின் நிலை மோசமாக உள்ளது

ஹெய்த்தியில் கடந்த மாதம் நடந்த மிக மோசமான நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் தலைநகர் போர்த்தோபிரான்ஸிலிருந்து மட்டும் ஐந்து லட்சம் பேர்வரை வெளியேறியிருக்கக்கூடும் என்று ஐநா மன்றம் கணித்திருக்கிறது.

அதேசமயம் இவர்களில் பலர் உதவி நிறுவனங்கள் அமைத்திருக்கும் தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோராமல், நகர்ப்புரங்களை தாண்டி கிராமப்புறங்களில் இருக்கும் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்க ளின் வீடுகளிலேயே தஞ்சம் கோரியிருப்பதாகவும் ஐநா மன்றம் கூறியிருக்கிறது.

ஹெய்த்தியில் செயற்படும் ஐநா மன்றம் மற்றுமுள்ள உதவி நிறுவனங்கள் அனைத்தும் அங்குள்ளவர்களின் இருப்பிடம் குறித்து முக்கிய கவனம் செலுத்திவரு வதாக ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்க ளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான கூடார நகரங்கள் என்பவை தற்காலிக தீர்வே என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


விவாகரத்து கேட்டு 12 வயது சிறுமி வழக்கு

செளதியில் பெண்கள்
செளதியில் பெண்கள்

சௌதி அரேபியாவில், 12 வயது சிறுமி ஒருவர், அவரது 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு, தீர்ப்புக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, அவர் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுமார் 22,000 டாலர்கள் பணத்துக்காக, இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தனது தந்தையை மீற விரும்பவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் கூறியதாக, சௌதி அரேபியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணங்கள் மிகவும் அதிகரித்து வரும் அளவில் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் சௌதி அரேபியாவில், இந்த வழக்கு குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்தியரங்கம்
அதிபர் மகிந்த ராஜபக்ச
அதிபர் மகிந்த ராஜபக்ச

இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் நவம்பரில் துவங்கும்- உச்ச நீதிமன்றம்

இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது தடவையாகத் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு அதாவது 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாவதாக இலங்கையின் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது. இந்தத் தகவலை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டிருப்பதாக அரச தகவல் திணைக்களம் இன்று கூறியிருக்கின்றது.

தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மிஞ்சி இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே மீண்டும் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார்.

எனினும் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த நாட்டு மக்கள் அவரை 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருந்ததைச் சுட்டிக்காட்டி சில சட்ட வல்லுனர்கள் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அவரது பதவிக்காலம் அடுத்த வருடம் அதாவது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது என வாதிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதியாக தான் எப்போது பதவி ஏற்க வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆலோசனை கேட்டிருந்தார். இதனையடுத்து, நாட்டின் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா அவர்களின் தலைமையில் ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் கூடி ஆராய்ந்ததன் பின்னர் தமது முடிவை ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்திருந்தார்கள்.

இதனடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது இரண்டாவது பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே ஆரம்பமாகின்றது என ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்திருக்கின்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தெர்தலில் முதல் தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள், அந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் முடிந்தும் வன்முறை ஒயவில்லை - இலங்கை நிலை குறித்து அம்னெஸ்டி கவலை

தேர்தலுக்குப் பிறகும் அடக்குமுறைகள் தொடர்வதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்
தேர்தலுக்குப் பிறகும் அடக்குமுறைகள் தொடர்வதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததையடுத்து, நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் அரசியல் அடக்குமுறைகள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆயினும் அதற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் மோசமான முறையில் நெருக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் மது மல்ஹோத்ரா அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

தேர்தலுக்குப் பின்னர், எதிரணி ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், முன்னணி பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள், தொழிற்சங்கவாதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

தொடரும் வன்முறைகள்

தேர்தலுக்குப் பின்னர் 160க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் அத்துமீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகின்ற கபே எனப்படும் சுதந்திரமான நீதியான தேர்தலுக்கான கண்காணிப்புக் குழுவின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை வன்முறைகள் அதிகரித்திருப்பதும், நாட்டின் பல இடங்களில் நம்பமுடியாத அளவிற்கு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதையும் பார்க்கும்போது, எங்களுக்கு மத்தியில் ஜனநாயக நடைமுறைகள் இருக்கின்றது என்பதைச் சிந்திக்க முடியாமல் இருக்கின்றது. இது குறித்து கவலையாக இருக்கின்றது என அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மன்னார் பகுதியில் மீண்டும் மீன்பிடிக்கு கெடுபிடிகள்

மன்னாரில் உள்ள மீன்படி படகுகள்
மன்னாரில் உள்ள மீன்படி படகுகள்

இலங்கையின் வடமேற்கேயுள்ள மன்னார் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு மீண்டும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் அப்பகுதியில் மீன்பிடிக்கலாம் என்று கூறப்பட்டதாகவும், தேர்தல் முடிந்த பிறகு காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வன்னிப் பகுதி மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாலேயே இந்தத் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அங்கு எந்தவிதமான புதிய தடைகளும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை கடற்படையின் பேச்சாளர் கூறுகிறார். மன்னார் பகுதி மற்றொரு நாட்டுக்கு அருகே இருப்பதால் கடத்தல்கள், குறிப்பாக ஆட்கடத்தல்களை தடுக்கவே இரவு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010